வலையில் விழாத கோல்கள்
இந்த உலகக் கோப்பைப் போட்டியில் கோல்கள் அடிக்க முயற்சி செய்ததில் ஜெர்மனி அணிக்கே முதலிடம். அந்த அணி 72 கோல் ஷாட்களை அடித்துள்ளது. ஆனால் அதிலிருந்து அந்த அணிக்கு 2 கோல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. என்னவொரு பரிதாப நிலை. அடுத்த இடத்தில் உள்ள ஸ்பெயின் அணி, 49 ஷாட்களில் 6 கோல்கள் அடித்துள்ளது. ஜெர்மனிக்கு இந்த விதத்தில் 3% மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. ஒரு கோலும் அடிக்காத கோஸ்டா ரிக்கா மட்டுமே ஜெர்மனியை விடவும் மோசமான நிலையை இந்தப் போட்டியில் சந்தித்துள்ளது. நடப்பு சாம்பியனுக்கு இப்படியொரு நிலை வந்திருக்க வேண்டாம்.
2014 உலகக் கோப்பையில் ஜெர்மனிக்கு எதிராக ஏழு ஆட்டங்களில் நான்கு கோல்கள் மட்டுமே எதிரணிகளால் அடிக்கமுடிந்தது. ஆனால் இந்தமுறை சரியான தடுப்பாட்டம் இல்லாததால் 3 ஆட்டங்களிலேயே 4 கோல்களை விட்டுக்கொடுத்துள்ளது.
இந்த உலகக் கோப்பையில் ஜெர்மனி அணி, 2 கோல்களை மட்டுமே அடித்துள்ளது. 1938-ல் இரு ஆட்டங்கள் மட்டுமே விளையாடி 3 கோல்களை அடித்தது. இந்த இரு முறையும் அந்த அணி முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது.