இவரை மாதிரி இருந்தால் தான் ரோஹித் சர்மாவால் அடுத்த உலகக்கோப்பை வரை விளையாட முடியும்; முத்தையா முரளிதரன் ஓபன் டாக் !!

இவரை மாதிரி இருந்தால் தான் ரோஹித் சர்மாவால் அடுத்த உலகக்கோப்பை வரை விளையாட முடியும்; முத்தையா முரளிதரன் ஓபன் டாக்

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா அடுத்த உலகக்கோப்பை தொடரிலும் விளையாட வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் தோல்வியையே சந்திக்காமல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி, இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என பேசப்படும் அளவிற்கு பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதால், இந்த முறை இந்திய அணியே நிச்சயம் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதி போட்டியில் நடந்ததோ வேறு, இந்திய அணியை மிக இலகுவாக கையாண்ட ஆஸ்திரேலிய அணி, பெரிய போராட்டம் கூட இல்லாமல் இந்திய அணியை வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

மீண்டும் ஒரு முறை இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தவறவிட்டுள்ளதால் இந்திய கிரிக்கெட் வாரியத்திலும் பல குழப்பங்கள் ஏற்பட துவங்கிவிட்டது. அடுத்த உலகக்கோப்பை தொடருக்கான வலுவான அணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம், ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களை இந்திய அணியில் இருந்து ஓரங்கட்ட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா இந்திய அணியில் இருந்து விரைவில் ஓரங்கட்டப்படலாம் அல்லது ரோஹித் சர்மாவே தானாக முன்வந்து ஓய்வை அறிவிக்கலாம் என பரவலாக பேசப்படுகிறது.

இந்தநிலையில், ரோஹித் சர்மா குறித்து பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், ரோஹித் சர்மா அடுத்த உலகக்கோப்பை தொடரிலும் விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து முத்தையா முரளிதரன் பேசுகையில், “நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை யாருமே குறை சொல்ல முடியாது, அந்த அளவிற்கு அவர் இந்திய அணிக்காக மிக சிறப்பான துவக்கத்தை அமைத்து கொடுத்தார். உலகக்கோப்பை தொடர் முழுவதும் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடினார். ரோஹித் சர்மாவிற்கு தற்போது 36வயது தான் ஆகிறது, அவர் விராட் கோலியை போன்று பிட்னெசாக இருந்தால் 2026ம் ஆண்டு நடைபெறும் அடுத்த உலகக்கோப்பை தொடரிலும் விளையாட முடியும். பிட்னெசில் ரோஹித் சர்மா கவனம் செலுத்த வேண்டும். சீனியர் வீரர்கள் குறை சொல்ல முடியாத அளவிற்கு நல்ல பார்மில் இருக்கும் போதே எதற்காக இளம் வீரர்களுக்கான வாய்ப்பு குறித்த பேச்சு வருகிறது என தெரியவில்லை. முழு உடற்தகுதியுடன் அவர்கள் சிறப்பாக விளையாடும் வரையிலும் சீனியர் வீரர்களை விளையாட வைப்பதே சரியானதாக இருக்கும். ரோஹித் சர்மா அதிக அனுபவம் வாய்ந்த சிறந்த பேட்ஸ்மேன். அவர் ஒருநாள் போட்டிகளில் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார். என்னை பொறுத்தவரையில் அவர் அடுத்த உலகக்கோப்பையில் விளையாடுவார் என்றே கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.