மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா களத்தில் நடுவருடன் வாதம் செய்து, ஸ்டெம்பை தட்டியதால், அவருக்கு எச்சரிக்கையுடன் கூடிய அபராதத்தை ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ளது.
12-ஐபிஎல் 20 போட்டிகள் நடந்து வருகின்றன. கொல்கத்தாவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் குவித்தது. 233 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்து 34 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா 3 பவுண்டரிகள் உள்பட 13 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். குர்னே வீசிய 4-வது ஓவரில்போது ரோஹித் சர்மா கால்காப்பில் பந்தை வாங்கியதால், நடுவர் எல்பிடபிள்யு அளித்ததால், ஆட்டமிழந்தார். ஆனால், அது குறித்து ரோஹித் சர்மா நடுவரிடம் வாக்குவாதம் செய்தது மட்டுமல்லாமல், செல்லும் போது தனது பேட்டால் ஸ்டெம்பை தட்டிவிட்டுச் சென்றார்.
ஒரு அணியின் கேப்டன் இதுபோன்று ஒழுக்கக் குறைவாக நடந்து கொண்டது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. போட்டி முடிந்தவுடன் இதுதொடர்பாக களநடுவர்கள் இருவரும் போட்டி நடுவரிடம் ரோஹித் சர்மா செயல்பாடு குறித்து புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் ரோஹித் சர்மாவிடம், போட்டி நடுவர் நடத்திய விசாரணையின்போது தனது தவறை ரோஹித் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அணியின் கேப்டன் ஒழுக்கக்குறைவாக நடந்து கொள்ளக்கூடாது என்று எச்சரித்த போட்டி நடுவர், ரோஹித் சர்மாவுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதத்தை அபராதமாக விதித்தார்.
இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ” மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டி விதிமுறைகளை மீறி லெவல் ஒன் குற்றத்தைச் செய்துள்ளார். ரோஹித் சர்மாவின் செயல் ஒழுக்கக் குறைவானது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். ஆதலால், அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம்விதிக்கப்படுகிறது ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீசுவதற்கு அதிகநேரம் எடுத்துக்கொண்டதற்காக ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.வ்