புரோ கபடி ‘லீக்’கில் ஹாட்ரிக் சாம்பியன்: பாட்னா அணிக்கு ரூ.3 கோடி பரிசு

புரோ கபடி லீக் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற பாட்னா பைரேட்ஸ் அணிக்கு ரூ.3 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தது.

நேற்றிரவு நடந்த இறுதிப்போட்டியில் அந்த அணி 55-38 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் ‘லீக்’ ஆட்டத்தில் 2 முறை தோற்றதற்கு அந்த அணி சரியான பதிலடி கொடுத்தது.

நட்சத்திர நாயகன் பர்தீப் நர்வால் மீண்டும் ஒரு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாட்னா அணி சாம்பியன் பட்டம் பெற முக்கிய பங்கு வகித்தார். நேற்று அவர் 24 ரைடு முயற்சியில் 19 புள்ளிகளை எடுத்தார்.

சாம்பியன் பட்டம் வென்ற பாட்னா பைரேட்ஸ் அணிக்கு ரூ.3 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த குஜராத் அணி ரூ.1.8 கோடியும், 3-வது இடத்தை பிடித்த பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு ரூ.1.2 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த சீசனில் அதிக புள்ளிகளை பெற்ற வீரர் என்ற மகத்தான சாதனையை பர்தீப் நர்வால் பெற்றார். அவர் 26 ஆட்டத்தில் விளையாடி 369 ரைடு புள்ளிகளை பெற்றார். அவரது ரைட்டில் 271 முறை வெற்றிகரமாக அமைந்தது. 19 தடவை ‘சூப்பர் 10’ அங்கீகாரத்தையும், 18 முறை சூப்பர் ரைடு அந்தஸ்தையும் அவர் பெற்றார்.

இதன்மூலம் இந்த சீசனில் பர்தீப் நர்வால் சிறந்த ரைடர் விருது மற்றும் மதிப்புமிக்க வீரருக்கான விருது ஆகிய இரண்டையும் தட்டிச்சென்றார்.

இதன்மூலம் அவர் ரூ25 லட்சம் பரிசை (மதிப்புமிக்க வீரர், ரூ.15 லட்சம், சிறந்த ரைடர் ரூ.10 லட்சம்) தட்டிச்சென்றார்.

சிறந்த தடுப்பு ஆட்டக்காரராக சுரேந்தர் நாடா (அரியானா) தேர்வு பெற்றார். அவர் 80 ‘டேக்கிள்’ புள்ளிகளை எடுத்தார். சிறந்த புதுமுக வீரர் விருதை குஜராத்தை சேர்ந்த சச்சின் தட்டி சென்றார். அவர் 24 ஆட்டத்தில் 173 புள்ளிகளை எடுத்தார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.