தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம் சதம் அடித்தவுடன் அவரை ட்விட்டரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணிக்கும், ஆஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்து வருகிறது. முதல்நாள் ஆட்டமான நேற்று தென் ஆப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் அபாரமாக ஆடி சதம் அடித்தார்.
23-வயதான இளம் வீரர் ஜோகன்ஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் சதம் அடித்தது முக்கியமாக பார்க்கப்படுகிறது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 216 பந்துகளைச் சந்தித்த மார்க்ரம் 152 ரன்கள் சேர்த்திருந்தார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, அந்த அணியின் ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனமாக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டார். 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிக்கு அந்த அணியை தயார் செய்யும் விதமாக மார்க்ரம்முக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஒரு நாள் போட்டிகளின்போது, மார்க்ரம் குறிப்பிட்ட ஷாட்களை அடித்தால், அவரை முதுகில் தட்டிக்கொடுத்து விராட் கோலி பாராட்டியதைக் காணமுடிந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மார்க்ரம் சதம் அடித்தவுடன் ட்விட்டரில் விராட் கோலி பாராட்டு தெரிவித்தார்.

மார்க்ரம்மின் ஆட்டத்தை தொலைக்காட்சியில் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சதம் அடித்த அவருக்கு வாழ்த்துக்கள் என்று விராட் கோலி தெரிவித்து இருந்தார்.
Aiden Markram ??
— Virat Kohli (@imVkohli) March 30, 2018
இந்நிலையில், முதல்ஆட்டம் முடிந்த நிலையில், ஊடகங்களுக்கு எய்டன் மார்க்ரம் பேட்டி அளிக்கையில், விராட் கோலியின் பாராட்டு குறித்து கேட்கப்பட்டது.
அப்போது அவர் கூறுகையில், ‘இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி என்னை ட்விட்டரில் பாராட்டி இருப்பது மிகமகிழ்ச்சியாக இருக்கிறது. ஏராளமான வீரர்களை நான் பார்த்து இருக்கிறேன், கடந்து வந்திருக்கிறேன், அதில் விராட் கோலி என்னைக் காட்டிலும் வயது மூத்தவர். அவரின் பேட்டிங் திறமை என்னை வெகுவாக கவர்ந்தது. அவர் இப்போது என்னை ஊக்கப்படுத்த தெரிவித்த பாராட்டுக்கள் என்னை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும்.
இந்தியா இங்கு சுற்றுப்பயணம் வந்திருந்த போது, டெஸ்ட் போட்டியில் நான் 94 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்துவிட்டேன். அப்போது, என்னிடம் வந்து பேசிய விராட் கோலி, சிறப்பாக பேட் செய்தீர்கள். ஆனால், துரதிருஷ்டவசமாக சதம் அடிக்க முடியாமல் ஆட்டமிழந்து விட்டீர்கள் என பாராட்டினார்.
அவர் அப்போது என்னை பாராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது. இப்போதும் என்னை ஊக்கப்படுத்த அவர் பாராட்டி இருப்பது என்னை பெருமைப்படுத்துகிறது’ எனத் தெரிவித்தார்.