மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா.. கிண்டலடிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் வெறும் 10 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்த ரோஹித் சர்மாவை, கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக கிண்டலடித்து வருகின்றனர்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் வெறும் 208 ரன்களை எடுக்க முடியாத இந்திய அணி, 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்திய அணியின் இந்த தோல்விக்கு, ரோஹித் சர்மா, தவான் மற்றும் கோஹ்லியின் பொறுப்பற்ற ஆட்டம் தான் காரணமாக அமைந்தது. இதனையடுத்து ரோஹித் சர்மாவிற்கு பதில் வெளிநாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடும் ரஹானேவை தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான இரண்டாவது போட்டிக்கான அணியில் எடுக்க வேண்டும் எனவும் கிரிக்கெட் வல்லுநர்கள் உள்பட ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வந்தனர்.
ஆனால், செஞ்சூரியனில் நேற்று முன்தினம் துவங்கிய இரு அணிகள் இடையேயான இரண்டாவது போட்டியிலும், ரஹானேவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ரோஹித் சர்மாவே அணியில் மீண்டும் இடம்பிடித்தார். அதுமட்டுமல்லாமல் முதல் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர் குமாரையும் இரண்டாவது போட்டிக்கான அணியில் இடம்பெறாதது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
செஞ்சூரியனில் நடைபெற்று வரும் இரு அணிகள் இடையேயான இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாளான நேற்று களமிறங்கிய ரோஹித் சர்மா வெறும் 10 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து, ரசிகர்களின் கூற்றை உண்மைப்படுத்தினார்.
இதனையடுத்து கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா மீது கடுப்பான நெட்டிசன்கள், ரோஹித் சர்மா மற்றும் கோஹ்லியை சமூக வலைதளங்களில் கடுமையாக கிண்டலடித்து வருகின்றனர்.
மேலும் இரு அணிகள் இடையேயான மூன்றாவது போட்டியிலாவது ரோஹித் சர்மாவிற்கு பதில், ரஹானேவை அணியில் சேர்க்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கோரிக்கை வைத்த்உ வருகின்றனர்.