ஆஷஸ் தொடரில் 774 ரன்களைக் குவித்து டெஸ்ட் தொடரில் சுனில் கவாஸ்க, ல்ர் சாதனையை சமன் செய்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை இங்கிலாந்து வீழ்த்த திணறியதன் காரணங்களை சச்சின் டெண்டுல்கர் அலசியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்போதைக்கு நம்பர் 1 பேட்ஸ்மெனான ஸ்மித்தின் உத்தி சிக்கல் நிறைந்தது ஆனால் அவரது மனம் ஒருங்கிணைந்த ஒன்று என்று சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
சிக்கலான உத்தி ஒருங்கிணைந்த மனம் இதுதான் மற்றவர்களிடமிருந்து ஸ்மித்தை வேறுபடுத்துகிறது என்றார் சச்சின் டெண்டுல்கர்.
தன் ட்விட்டர் பக்கத்தில் ஸ்மித்தின் பேட்டிங் உத்தியை விவரித்த சச்சின், “முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பவுலர்கள் அவரை ஸ்லிப், விக்கெட் கீப்பர் கேட்சில் வீழ்த்த முயன்றனர், ஆனால் ஸ்மித் என்ன செய்தார், ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்து வந்து லெக் ஸ்டம்பை காண்பிக்கும் விதமாக ஆடி பவுலர்கள் உத்தியை எதிர்கொண்டார். இதன் மூலம் அவர் தனது அணுகுமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்வுகளையும் சாதுரியமும் காட்டினார்.
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் லெக் ஸ்லிப், லெக் கல்லி வைத்து ஜோப்ரா ஆர்ச்சரை வைத்து சிலபல ஷார்ட் பிட்ச் பவுலிங்கை மேற்கொண்டனர். இதில் ஸ்மித் கொஞ்சம் ஆடிப்போனார், காரணம் தன் உடல் எடை முழுதையும் பின் காலில் வைத்து பந்தின் திசைக்கு நேராக வந்ததால் சிக்கல் ஏற்பட்டது. ஏன் ஜோப்ரா பவுன்சரில் அடி வாங்கினார் என்பதற்கு இதுதான் காரணம்.
எந்த ஒரு பேட்ஸ்மெனுக்கும் தலை கொஞ்சம் முன்னால் நகர வேண்டும், முன்னால் கொஞ்சம் நீட்டி சற்றே பந்தின் திசைக்கு நேராக இருக்க வேண்டும். ஆனால் ஸ்மித் பின்னங்காலில் உடல் எடை முழுதையும் இறக்கி பந்தின் லைனில் வந்ததால் மட்டை முகத்துக்கு நேராக எழும்பி பந்திலிருந்து கண்ணை எடுக்க நேரிட்டதால் அடி வாங்கினார்.
ஆனால் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் உத்தியை மாற்றினார், முன்னால் உடலை நீட்டி பவுன்சரின் லைனிலிருந்து சற்றே விலகி பந்தை ஆடாமல் குனிய முடிந்தது. தன் உத்தியை மிகச்சாதுரியமாக அவர் சரி செய்து கொண்டார். இதனால்தான் கூறுகிறேன், சிக்கல்கள் நிறைந்த பேட்டிங் உத்தி ஆனால் மனத்தளவில் மிகவும் கவனமான ஒருங்கிணைந்த அணுகுமுறை ஸ்மித்தினுடையது என்று” இவ்வாறு கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.