சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக யுவராஜ் சிங் அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று (திங்கட்கிழமை) அறிவித்தார்.
இதுகுறித்து யுவராஜ் சிங் மும்பையில் பேசும்போது, “25 ஆண்டுகளுக்குப் பிறகு நான் கடந்து செல்ல முடிவெடுத்து இருக்கிறேன். கிரிக்கெட் எனக்கு வேண்டிய அனைத்தையும் அளித்தது. நான் இன்று இந்த இடத்தில் இருப்பதற்கான காரணமும் கிரிக்கெட்தான். நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி. இந்திய அணிக்காக 400 போட்டிகளில் விளையாடி இருக்கிறேன்.
நான் முதன்முதலாக கிரிக்கெட் விளையாடும்போது இதை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
கிரிக்கெட் எனக்கு வெறுப்பும், அன்பும் கலந்த விளையாட்டாக இருந்தது. கிரிக்கெட் எனக்கு என்னவாக இருந்தது என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை. இந்த விளையாட்டு எனக்கு போராடக் கற்றுக்கொடுத்தது. நான் வெற்றியடைந்ததைவிட அதிக முறை தோல்வி அடைந்து இருக்கிறேன். எனினும் நான் விட்டுக் கொடுக்கவில்லை” என்று தெரிவித்தார்.
இந்திய அணிக்காக யுவராஜ் இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளிலும், 304 ஒரு நாள் போட்டிகளிலும், 58 20-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
2011-ம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் அதிலிருந்து கடும் போராட்டங்களுக்குப் பிறகு மீண்டு, மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார். எனினும் யுவராஜால் தனக்கான நிலையான இடத்தை அணியில் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போனது.
தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த யுவராஜ் தற்போது சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகளிலிருந்து யுவராஜ் ஒய்வு பெறுவதாகவும் அறிவித்திருக்கிறார்.
யுவராஜ் இந்திய அணிக்காக இறுதியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 20-20 போட்டியில் விளையாடியிருந்தார்.
19 வயது இளைஞராக 2000-ம் வருடம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சர்வதேச அரங்கில் அடியெடுத்து வைத்த யுவராஜ், 2003 நாட்வெஸ்ட் டிராஃபியை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார்.
டி20 போட்டிகளில் 12 பந்துகளில் அரைசதம் கடந்ததே தற்போது வரை சாதனையாக உள்ளது. மேலும் 2000-ம் ஆண்டு யு-19 உலகக் கோப்பை, 2007 டி20 உலகக் கோப்பை, 2011 50 ஓவர் உலகக் கோப்பை ஆகியவற்றை இந்தியா கைப்பற்ற முக்கியப் பங்காற்றியுள்ளார். இதில் யுவராஜின் சாதனைகள் அளப்பரியது.
What a fantastic career you have had Yuvi.
You have come out as a true champ everytime the team needed you. The fight you put up through all the ups & downs on & off the field is just amazing. Best of luck for your 2nd innings & thanks for all that you have done for ?? Cricket.? pic.twitter.com/J9YlPs87fv— Sachin Tendulkar (@sachin_rt) June 10, 2019