இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தேர்வாக உள்ள சவுரவ் கங்குலி, சில விஷயங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை சவுரவ் கங்குலி இன்று தாக்கல் செய்தார். வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் கங்குலி தேர்வாவது உறுதியாகி உள்ளது. பிசிசிஐ தலைவராக கங்குலியை தேர்வு செய்துள்ளோம் என்று அதன் முன்னாள் நிர்வாகியும் ஐபிஎல் தலைவருமான ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார். எனினும் 23ம் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கங்குலி பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பனர்ஜி தனது வாழ்த்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், “ஒருமனதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நீங்கள் தேர்வானதற்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துகள் கங்குலி. உங்களை உருவாக்கியதற்காக மேற்கு வங்கம் பெருமை கொள்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த கங்குலி, “நான் தேர்வாவது மகிழ்ச்சிதான். ஏனெனில் இது சில விஷயங்களை செய்வதற்கு எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு. நான் தேர்தல் மூலம் தேர்வு ஆனாலும் அல்லது ஒருமனதாக தேர்தல் இல்லாமல் தேர்வு ஆனாலும் பெரிய பொறுப்பு உள்ளது.
ஏனெனில் கிரிக்கெட் உலகில் இது மிகப்பெரிய நிறுவனம். அதில் இந்தியா ஒரு அதிகார மையம். இதுதான் மிகப்பெரிய சவால். இன்னும் சில மாதங்களில் அனைத்தும் சீரடைந்து இந்திய கிரிக்கெட் இயல்பு நிலைக்கு திரும்பும். அணியுடன் சேர்ந்து மாற்றத்தை ஏற்படுத்துவதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
இவர் ஏற்கெனவே கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார்.
ஆகவே கங்குலி வரும் 2020ஆம் ஆண்டு ஜூலை வரை தான் கங்குலி இந்தப் பதவியில் நீடிக்க முடியும். ஏனென்றால், பிசிசிஐ விதிகளின்படி ஒரு நபர் தொடர்ச்சியாக 6ஆண்டுகள் வரை மட்டுமே நிர்வாக பதவியை வகிக்க முடியும். கங்குலி கடந்த 5ஆண்டுகள் மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தில் நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.
Congrats on being elected the @BCCI President, Dadi.
I am sure you will continue to serve Indian Cricket like you always have!?
Best wishes to the new team that will take charge. pic.twitter.com/ucGnOi0DRC— Sachin Tendulkar (@sachin_rt) October 15, 2019