சக வீரரை அடித்த வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைனை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்தது.
தேசிய கிரிக்கெட் லீக் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் டாக்கா மண்டலம்-குல்னா மண்டலம் அணிகள் இடையிலான ஆட்டம் குல்னாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாக்கா மண்டல அணிக்காக விளையாடி வரும் வங்காளதேச அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைன், நேற்று முன்தினம் சக வீரர் அராபத் சன்னியை கோபத்தில் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். தனது பந்து வீச்சு திறமை குறித்து அராபத் சன்னி குறை கூறியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து புகார் வந்ததும் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் ஷகாதத் ஹூசைனை உடனடியாக இடைநீக்கம் செய்தது. அவர் வீடு திரும்பினார். ஷகாதத் ஹூசைனுக்கு ஒரு ஆண்டு தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வங்காளதேச கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 33 வயதான ஷகாதத் ஹூசைன் வங்காளதேச அணிக்காக 38 டெஸ்ட், 51 ஒருநாள் மற்றும் 6 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார்.
முன்னதாக்,
கோபத்தில் எதிரணி வீரரை திட்டிய ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சனுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன். இவர் உள்ளூர் போட்டியின்போது குயின்ஸ்லாந்து வீரரை சரமாரியாகத் திட்டினார். இதுபற்றி நடுவர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, ஒரு சர்வதேசப் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால் வரும் 21- ஆம் தேதி பிரிஸ்பேனில் தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் அவர் விளையாட மாட்டார். அவருக்குப் பதிலாக ஸ்டார்க் சேர்க்கப்படுகிறார். இதையடுத்து பிரிஸ்பேனில் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர், தனது சொந்த ஊரான விக்டோரியாவுக்குத் திரும்பினார்.
அடிலெய்டில், பாகிஸ்தானுக்கு எதிராக வரும் 29 ஆம் தேதி நடக்கும் 2 வது டெஸ்ட் போட்டியில் பேட்டின்சன் பங்கேற்பார்.