நாட்டிங்கமில் வியாழனன்று நடைபெறுவதாக இருந்த உலகக்கோப்பை 18வது ஆட்டமான இந்திய-நியூஸி. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டதையடுத்து இரு அணிகளும் தலா 1 புள்ளிகளைப் பெற்றன.
ஆட்டம் முடிந்தவுடன் ஒளிபரப்பாளர்களுக்கு பேட்டியளித்த விராட் கோலி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழையும் என்ற சமிக்ஞையைக் கொடுத்துள்ளார். மேலும் ஷிகர் தவண் பிற்பாடு நடைபெறும் போட்டிகளுக்கும் அரையிறுதிக்கும் இருப்பார் என்று துணை சமிக்ஞையையும் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது:
ஆட்டம் கைவிடப்பட்டது நல்ல முடிவுதான். இதுவரை எல்லா போட்டிகளையும் வென்ற அணிகள் ஆளுக்கு ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொள்வது என்பது தவறானதல்ல. ஆகவே ஒரு புள்ளியை எடுத்துக் கொள்கிறோம்.

ஞாயிறைப் பொறுத்தவரை (பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி) மனத்தளவில் தயாராக இருக்கிறோம். அங்கு போய் ஆட்டத் திட்டத்தை சரியாகச் செயல்படுத்த வேண்டியதுதான். போட்டிக்காக களத்தினுள் நுழைந்து விட்டால் அங்கு அமைதியும் ரிலாக்ஸ் தன்மையுமே இருக்கும்.
ஆனால் வெளியில் இருக்கும் சூழல், பாகிஸ்தான் போட்டியைப் பொறுத்தவரை கொஞ்சம் அச்சமூட்டுவதாக உள்ளது. ஆனால் திட்டத்தை சரியாகச் செயல்படுத்த முனைவோம். மிகப்பெரிய போட்டி, அதில் பங்கேற்பது என்பது பெருமைக்குரியதாகும்.
அந்தப் போட்டி எங்களின் சிறப்பான திறமைகளைக் கொண்டு வரும். ஷிகர் தவன் 2 வாரங்களுக்கு கையில் பிளாஸ்திரியுடன் இருப்பார். தொடரின் பிற்பகுதி ஆட்டங்களுக்கும் அரையிறுதிக்கும் அவர் இருப்பார் என்று நம்புகிறேன்.

அவர் உத்வேகத்துடன் இருக்கிறார் எனவே அவரை எங்களுடனேயே வைத்திருக்க விரும்புகிறோம்.
இவ்வாறு கூறினார் விராட் கோலி.
ஆனால் பொதுவாக கேப்டன்கள் கூறும்போது ‘அரையிறுதிக்குள் நுழைய வாய்ப்பிருந்தால் அல்லது அரையிறுதி சாத்தியமானால் அல்லது அரையிறுதிக்குள் இந்திய அணி நுழைந்தால் அதில் ஷிகர் ஆடுவார்’ என்று கூறலாம், தொடரின் பிற்பகுதி ஆட்டங்களுக்கும் அரையிறுதிக்கும் ஷிகர் தவண் இருப்பார் என்று திட்டவட்டமாகத் தெரிவிப்பது என்ன மாதிரியான ஒரு பேச்சுமுறை என்பது குழப்பமாக உள்ளது. அதாவது அரையிறுதிக்கு இந்தியா முன்னேறும், ஷிகர் தவணும் ஆடுவார் என்ற இரட்டை சமிக்ஞையை கோலி அளித்துள்ளார்.