இந்திய கிரிக்கெட் வீரர் தவானை போற்றி புகழும் பாகிஸ்தான் ரசிகர்கள்… காரணம் என்ன..?
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான தவானை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, நியூசிலாந்துடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று அதில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் தொடரை ஒட்டுமொத்தமாக இழந்தது.
இந்த தொடரின் நான்காவது போட்டியில் பாகிஸ்தான் அணியின் சோயிப் மாலிக், ரன் எடுக்க ஓடிய போது நியூசிலாந்தின் முன்ரோ பந்தை பிடித்து அதை ஸ்டெம்பை நோக்கி எறிந்தார். முன்ரோ வீசிய அந்த பந்து எதிர்பாராத விதமாக சோயிப் மாலிக்கின் தலையில் பட்டது. ஏற்கனவே ஹெல்மெட் அணியாமல் இருந்த சோயிப் மாலிக் பந்து தலையில் பட்டதும் வழி தாங்க முடியாமல் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். முதலுதவிக்கு பின்பு தொடர்ந்தும் விளையாடி அடுத்த ஓவரில் விக்கெட்டை இழந்தார்.
தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வரும் சோயிப் மாலிக், விரைவில் பூரண குணமடைய பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான ஷிகர் தவானும், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், சோயிப் மாலிக் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து, விரைவில் நீ மீண்டும் களம் காண்பாய் என்று சோயிப் மாலிக்கிற்கு நம்பிக்கையூட்டிருந்தார்.
தவானின் இந்த ட்வீட்டர் பார்த்த பாகிஸ்தான் ரசிகர்கள் பலர் தவானிற்கு தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் தவானை வெகுவாக பாராட்டியும் வருகின்றனர்.