தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடர்களில் பங்கேற்று விளையாடவுள்ளது.
இதற்கான இந்திய அணியில் அதிரடி துவக்க வீரர் ஷிகர் தவன் இடம்பெற்றுள்ளார். இதையடுத்து இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி மும்பையில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்டது. இந்திய அணியினர் முதலில் துபை சென்று பின்னர் அங்கிருந்து வெள்ளிக்கிழமை மற்றொரு விமானத்தில் தென் ஆப்பிரிக்கா செல்கின்றனர்.
இந்த தொடரில் விளையாடும் இந்திய வீரர்களின் மனைவி மற்றும் குழந்தைகளும் அவர்களுடன் சென்றுள்ளனர். அவ்வகையில், ஷிகர் தவன், விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் ஷர்மா உள்ளிட்டோர் தங்கள் குடும்பத்தினை உடன் அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இந்திய துவக்க வீரர் ஷிகர் தவனின் மனைவி மற்றும் குழந்தைகள் துபை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அவர்களால் அங்கிருந்து தென் ஆப்பிரிக்கா செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஷிகர் தவன் மட்டும் இந்திய அணியுடன் அங்கிருந்து தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார்.
இதுகுறித்து ஷிகர் தவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:
நான் எனது குடும்பத்துடன் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணியுடன் பயணித்தேன். அப்போது துபை விமான நிலையத்தில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டது.
அந்த நிறுவனம் எனது மனைவி ஆயிஷா முகர்ஜி மற்றும் 2 குழந்தைகளையும் துபை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திவிட்டது. அதற்கு அவர்களின் பிறப்பு உள்ளிட்ட இதர சான்றுகளை உடனடியாக சமர்பிக்கும்படி கூறியுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகள் உள்ளது என்று மும்பை விமான நிலையத்தில் நாங்கள் கிளம்பும் முன்பே ஏன் தெரிவிக்கவில்லை. அதிலும், ஒரு எமிரேட்ஸ் ஊழியர் மிகவும் தரக்குறைவாக நடந்துகொண்டார்.
2/2.They are now at Dubai airport waiting for the documents to arrive. Why didn't @emirates notify about such a situation when we were boarding the plane from Mumbai? One of the emirates' employee was being rude for no reason at all.
— Shikhar Dhawan (@SDhawan25) December 29, 2017
எனினும் ஷிகர் தவனின் இந்த குற்றச்சாட்டுக்கு எமிரேட்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், விதிகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து எமிரேட்ஸ் நிறுவன தரப்பில் தெரிவித்ததாவது:
கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி முதல் தென் ஆப்பிரிக்க அரசு விதிகளின் படி 18 வயதுக்குட்பட்டவர்களை தங்களுடன் அழைத்து வருபவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் என்ற சாட்சியை வைத்திருக்க வேண்டும். அதுபோல குழைந்தகளுடன் பயணம் செய்பவர்கள், அவர்களின் அனுமதியுடன் அழைத்து வருவதற்கான ஆதாரங்களை காண்பிக்க வேண்டும்.
அனைத்து விமான நிறுவனங்களின் மாதிரி, நாங்களும் ஒவ்வொரு நாட்டின் விதிகளுக்கு கட்டுப்பட்டு தான் இயங்கி வருகிறோம். இந்த விதிகளை கடைபிடிக்க எங்கள் பயணிகளுக்கும் பங்கு உண்டு. குறிப்பிட்ட ஒருவர் தனது பயணத்தின் போது தேவையான அனைத்து ஆவணங்களும் தன்னிடம் உள்ளது குறித்து சரிபார்த்துக்கொள்வது அவசியமாகிறது என்றிருந்தது.