சிஎஸ்கே நேற்று வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 17வது ஓவரில் கேன் வில்லியம்சன் பேட் செய்த போது ஷர்துல் தாக்கூர் இடுப்புக்கு மேல் வீசிய புல்டாஸுக்கு நோ-பால் கொடுக்காததே சன் ரைசர்ஸ் தோல்விக்குக் காரணம் என்று சன் ரைசர்ஸ் ரசிகர்கள் நடுவர் மீது பாய்ந்துள்ளனர்.
இதனையடுத்து ட்விட்டர் பக்கங்களில் ரசிகர்கள் நடுவர் வினீத் குல்கர்னி மீது பாய்ந்துள்ளனர். “ஆட்ட நாயகன் விருது வினீத் குல்கர்னிக்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்” என்றெல்லாம் கேலி பேசியுள்ளனர்:
உஷ்! கண்டுக்காதீங்க! தருணம்: சன் ரைசர்ஸ் தோல்வி எதனால்?
வினய் மாதுரி: நோ-பால் கொடுக்காத முட்டாள்தனமான முடிவுகள் இல்லாதிருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறுமாதிரியாக அமைந்திருக்கும்.
மேன் ஆஃப் ஜஸ்டிஸ்: டிவி நடுவரிடம் முறையிட்டு ஏன் நோ-பால் சரிபார்க்கக் கூடாது? சிறுசிறு விஷயங்கள் பெரிய முடிவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த நோ-பால் நெருக்கமானது என்று கூட கூற முடியாது மிகவும் வெளிப்படையானது.
அசீம் குரைஷி என்ற ட்விட்டர் கணக்கு வைத்திருப்பவர் ஒரு படிமேலே போய், “ஆட்ட நாயகன்: வினீத் குல்கர்னி” என்று பதிவிட்டதோடு, வினீத் குல்கர்னி யார் என்று தெரியவில்லையா? இவர்தான் நோ-பால் கொடுக்காத நடுவர், என்று பதிவிட்டுள்ளார்.
இன்னொரு ட்விட்டர் வாசியான வீ ஆர் ஹைதராபாத் என்ற கணக்கு வைத்திருப்பவர், “வினீத் குல்கர்னி இதனைச் செய்துள்ளார். சிஎஸ்கேயின் 12வது வீரராகத் திகழ அவர் முடிவெடுத்து விட்டார்” என்று சாடியுள்ளார்.
இன்னொரு ட்விட்டர் வாசி, கரண் சர்மா பவுண்டரியைத் தடுத்ததைத்தான் பேசுகின்றனர். ஆனால் நோ-பால் கொடுக்காத சீரழிவு முடிவை எடுத்த நடுவர் வினீத் குல்கர்னியைப் பற்றி ஒருவரும் பேசுவதில்லை என்று கூறியுள்ளார்.
ரக்ஷித் திக்ஷித் என்பவர், “உங்களுடைய திறமை குறைவான நடுவர் பணியினால் ஏன் அடுத்தவர் தோற்க வேண்டும்?” என்று கேட்டுள்ளார்.
பாப்யா@தானு என்பவர், ஐசிசி நடுவர் குழுவிலிருந்து வினீத் குல்கர்னியை பிசிசிஐ விலக்கிக் கொண்டது, தற்போது எப்படி அவர் மீண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்னும் பரவலான ஹேஷ்டேக்குகளில் சன் ரைசர்ஸ் ரசிகர்கள் வினீத் குல்கர்னியை விளாசியுள்ளனர்.