தற்போது இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ட்ரா செய்த இலங்கை அணி, இரண்டாவது போட்டியில் பரிதமாக தோற்றது. தற்போது இரு அணிகளும் டெல்லியில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்கள்.
இந்த மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்த பிறகு இரு அணிகளும் டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான, இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.
இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்திய இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமாலை இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கவில்லை. சாம்பியன்ஸ் டிராபி 2017இல் இந்திய அணிக்காக எதிராக அட்டகாசமாக விளையாடி சதம் அடித்த குஷால் மெண்டிசையும் இலங்கை அணியில் சேர்க்கப்படவில்லை.
ஆனால், இலங்கை அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் அசேலா குணரத்னா மீண்டும் இலங்கை அணியில் இடம் பிடித்து இருக்கிறார். தேவையான நேரத்தில் ரன் அடித்தும், முக்கியமான சமயத்தில் விக்கெட் எடுத்தும் அவருடைய அணிக்கு உதவுவார் குணரத்னே. இந்திய அணி இலங்கைக்கு சென்று விளையாடிய போது, முதல் டெஸ்டில் ஷிகர் தவான் அடித்த பந்து பட்டதால், அவரது கையில் காயம் ஏற்பட்டது. அப்போது விலகிய அவர், மீண்டும் இந்திய அணிக்கு எதிராக களமிறங்குவார்.
இலங்கை அணிக்கு கேப்டனாக இருந்து வெற்றி பெற தவறிய தினேஷ் சண்டிமாலின் கேப்டன் பதவியை பறித்தது மட்டும் இல்லாமல், ஒருநாள் அணியில் கூட அவரை சேர்க்கவில்லை. இதனால், இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரின் போது இலங்கை அணி கேப்டனாக திசாரா பெரேரா செயல் படுவார். குணதிலகா, திரிமன்னே, டிக்வெல்லா, சதீரா, மத்தியூஸ் மற்றும் குணரத்னே ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளார்கள்.
நட்சத்திர பந்து வீச்சாளர் லசித் மலிங்கா அணியில் இடம் பெறவில்லை, இதனால் சுரங்கா லக்மல், துஷ்மண்டா சமீரா, பிரதீப் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக செயல் படுவார்கள்.
இலங்கை அணி:
திசாரா பெரேரா (கேப்டன்) , உபுல் தரங்கா, தனுஷ்கா குணதிலகா, நிரோஷன் டிக்வெல்லா, சதீரா சமரவிக்ரமா, லாஹிரு திரிமன்னே, ஏஞ்சலோ மத்தியூஸ், சதுரங்கா டி சில்வா, சச்சித் பத்திரனா, அகிலா தனஞ்செயா, ஜெப்ரே வேண்டர்சே, துஷ்மண்டா சமீரா, சுரங்கா லக்மல், நுவான் பிரதீப், அசேலா குணரத்னா.