தற்போது இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நடந்தது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்காமல் 38.2 ஓவர்கள் எதிர்கொண்டு 112 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
இதன் பிறகு 113 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20.4 வது ஓவரில் இந்த இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது இலங்கை அணி.
இந்த போட்டியின் போது நடந்த சில விஷயங்களை பார்க்கலாம்:
1. இந்த போட்டியில் 18 பந்துகளை எதிர்கொண்டு ரன் எதுவும் அடிக்காமல் டக் அவுட் ஆனார் தினேஷ் கார்த்திக். இதனால் ஒருநாள் போட்டிகளில் அதிக பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆனவர் என்ற தேவையில்லாத சாதனையை படைத்தார் தினேஷ் கார்த்திக். இதே போட்டியில் 15 பந்துகள் எதிர்கொண்டு டக் அவுட் ஆன ஜேஸ்ப்ரிட் பும்ரா, இந்த பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறார்.
2. இந்த போட்டியின் போது முதல் பவர்பிளேயில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 11 ரன் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், ஒருநாள் போட்டி வரலாற்றில் முதல் பவர்பிளேவில் குறைந்த பட்ச ஸ்கோர் இதுவாகும்.
3. இந்த போட்டியில் இந்திய அணி தனது 5வது விக்கெட்டை 16வது ரன்னில் விட்டது. இதனால், குறைந்த ரன்னில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்தது இதுவாகும். இதற்கு முன்பு 1983ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 17 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்திருந்தது.
4. இந்திய அணி வெறும் 112 ரன் மட்டுமே எடுத்தது. இந்தியாவில் இந்திய அணி அடித்த மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.
5. இந்த போட்டியில் தோனி 65 ரன் அடித்தார். இந்திய அணியின் 58.04% ரன் தோனியே அடித்தார். இதனால், அணியின் அதிக சதவீத ரன் அடித்த வீரர்களில் 2வது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் டேவ் ஹாக்டன், 59.41% உடன் இருக்கிறார்.
6. இந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசி 4 ஓவர்கள் மெய்டன் செய்து 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார் இலங்கை அணியின் சுரங்கா லக்மல்.
7. இந்த முதல் ஒருநாள் போட்டியில் 176 பந்துகள் மீதம் இருக்க இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி.