உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – இலங்கை அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 4 ஆட்டத்தில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய நிலையில் 3-வது ஆட்டத்தில் இந்திய அணியிடம் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
இதன் பின்னர் மீண்டெழுந்த ஆஸ்திரேலிய அணி தனது 4-வது ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்றிருந்தது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறும்.
5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியிடம் இருந்து இம்முறை ஆதிக்கம் செலுத்தக்கூடிய அளவிலான செயல்திறன்கள் வெளிப்படவில்லை. வெற்றி பெற்ற 3 ஆட்டங்களில் ஆப்கானிஸ்தானை மட்டுமே எளிதாக வீழ்த்தமுடிந்தது. மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக தோல்வியின் அருகில் சென்றே வெற்றிப் பாதைக்குள் நுழைய முடிந்தது.
பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசி பார்முக்கு திரும்பியுள்ள டேவிட்வார்னரிடம் இருந்துமீண்டும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். கேப்டன்ஆரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான்கவாஜா, கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் பேட்டிங்கில் வலுசேர்க்கக் கூடியவர்களாக திகழ்கின்றனர். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க்அணியை முன்னின்று வழிநடத்துகிறார். இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டார்க் 74 ரன்களை வாரி வழங்கிய நிலையில் பாகிஸ்தானுடன் மோதிய ஆட்டத்தில் இறுதிக்கட்ட ஓவர்களில் விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு சிறந்த பங்களிப்பு செய்திருந்தார். அவருக்கு உறுதுணையாக பாட் கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன், நேதன் கவுல்டர் நைல் இருப்பது அணியின் பலத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
திமுத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை அ ணி 4 ஆட்டங்களில் விளையாடி 4 புள்ளிகளை பெற்றுள்ளது. இதில் இரு ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டிருந்தது. முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியிடம் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்த இலங்கை அணி அதன் பின்னர் ஆப்கானிஸ்தான் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த இரு ஆட்டங்களிலும் இலங்கைஅணி சவால் விடுக்கும் வகையிலானஆட்டத் திறன்களை வெளிப்படுத்தவில்லை. நியூஸிலாந்து அணியிடம் 136 ரன்களுக்கு சுருண்ட இலங்கை அணியானது ஆப்கானிஸ்தானிடம் 201ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் தாரை வார்த்திருந்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் வெற்றி காண முடிந்தது.
10 நாட்கள் இடைவெளிக்குப் பிறகுஇ லங்கை அணி தனது 5-வது இடத்தில்இன்று களமிறங்குகிறது. ஏனெனில் அந்த அணி வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக மோத இருந்தஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்தத் தொடரில் இலங்கை அணியின் பேட்டிங் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இரு ஆட்டங்களிலும் அந்த அணி முழுமையாக 50 ஓவர்கள் பேட் செய்யும் திறனை பெற்றிருக்கவில்லை. நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்கத்தில் 14 ரன்கள் இடைவெளியில் 5 விக்கெட்களையும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 36 ரன்கள் இடைவெளியில் 7 விக்கெட்களையும் இலங்கை அணி தாரை வார்த்திருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும்.
வேகப்பந்து வீச்சாளர் நூவன் பிரதீப் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும். தனது மாமியாரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள தாயகம் சென்றிருந்த மலிங்காவும் அணியினருடன் மீண்டும் இணைந்துள்ளார். தனது வலுவான யார்க்கர்களால் மலிங்கா நெருக்கடி தரக்கூடும்.