இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. டெல்லியில் நிலவி வரும் மாசு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த போட்டியில் புகை, இலங்கை வீரர்களுக்கு மிக அதிகமாக தொல்லை கொடுத்தது. இந்த நிலையில் இரண்டாம் நாள் போட்டி முடித்த பின் இலங்கை வீரர்கள் வாந்தி எடுத்ததாக கூறப்பட்டது. தற்போது நான்காவது நாளான இன்று போட்டி நடக்கும் போதே இலங்கை வீரர் ஒருவர் வாந்தி எடுத்து இருக்கிறார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
புகையால் தொல்லை
டெல்லியில் தற்போது மிகவும் மோசமான அளவிற்கு புகை நிலவி வருகிறது. இதனால் அங்கு நடக்கும் கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் அதிகம் பாதிப்பட்டுள்ளனர். இரண்டாம் நாள் போட்டியில் புகையை காரணம் காட்டி லாகிரு காமேஜ், சுரங்கா லக்மால் ஆகியோர் விளையாடாமல் வெளியேறினார்கள். இந்த நிலையில் இரண்டாம் நாள் போட்டி முடிந்த பின் இலங்கை வீரர்கள் வாந்தி எடுத்துள்ளார்கள்.
மறுபடியும் பிரச்சனை
இந்த நிலையில் நேற்றைய போட்டியிலும் இலங்கை வீரர்கள் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். இலங்கை கேப்டன் தினேஷ் சந்திமால் அதிக நேரம் களத்தில் இருந்ததால் அவர் அதிகம் பாதிக்கப்பட்டார். மேலும் பாதியில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவருக்கு ஆக்சிஜன் சிலண்டர்கள் கொண்டு வரப்பட்டது.
மீண்டும் வாந்தி எடுத்தார்
இன்றைய நான்காவது நாள் போட்டியில் குறைந்த நேரமே களத்தில் இருந்தும் கூட இலங்கை வீரர்கள் அதிகம் கஷ்டப்பட்டார்கள். இலங்கை பவுலர் சுரங்கா லக்மல் பாதியில் போட்டிக்கு நடுவே வாந்தி எடுத்தார். இதனால் அவர் மிகவும் சிரமப்பட்டார். அதேபோல் அவர் வாந்தி எடுத்தவுடன் அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி கொண்டு வரப்பட்டது.
ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது
இந்த 4வது நாள் ஆட்டம் முடிந்ததும், இலங்கை வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு சென்றனர். டிக்வெல்லா, டி சில்வா மற்றும் சண்டகண் ஆகியோருக்கு பல்ஸ் மற்றும் ஆக்சிஜன் அளவை பரிசோதனை செய்தனர், மூவருக்கும் 99, 98 மற்றும் 99 என்று இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் பிறகு அவர்கள் மேலும் மருத்துவ பரிசோதனை செய்ய மறுத்துவிட்டார்கள். போட்டியின் போது வாந்தி எடுத்த சுரங்கா லக்மலும் பரிசோதனை செய்ய மறுத்துவிட்டார்.