இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 135.3 ஓவர்களில் 373 ரன்களில் ஆளல் அவுட் ஆனது. இன்றைய ஆட்டத்தில் சண்டிமால் 361 பந்துகளுக்கு 164 ரன்னில் அவுட் ஆனார்.
இந்திய பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த அந்த அணியின் ஏஞ்ஜெலோ மேத்யூஸ், கேப்டன் தினேஷ் சண்டிமல் ஆகியோர் சதமடித்து அணியின் ஸ்கோரை பலப்படுத்தினர்.
தில்லியில் இரு அணிகளுக்கு இடையே சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. இதில் முரளி விஜய்-விராட் கோலி ஜோடி அபாரமாக ஆடி சதம் அடிக்க, முதல் நாளில் இந்தியா 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் அதிகபட்சமாக 155 ரன்கள் விளாசினார்.
2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை கோலி 156, ரோஹித் 6 ரன்களுடன் தொடங்கினர். அன்றைய ஆட்டத்தில் கோலி இரட்டைச் சதம் விளாசி அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினார். உடன் இருந்த ரோஹித் 65 ரன்களில் ஆட்டமிழக்க, எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். இந்நிலையில், 127.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது இந்தியா. சாஹா 9, ஜடேஜா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கோலி அதிகபட்சமாக 243 ரன்கள் அடித்திருந்தார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸ தொடங்கிய இலங்கை 2-ஆம் நாள் முடிவில் 44.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.
மேத்யூஸ்-சண்டிமல் அபாரம்: இந்நிலையில், 3-ஆம் நாளான திங்கள்கிழமை ஆட்டத்தை மேத்யூஸ் 57, சண்டிமல் 25 ரன்களுடன் தொடங்கினர்.
அபாரமாக ஆடிய இந்த ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டு ஸ்கோரை உயர்த்தியது. அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். இந்நிலையில் 145 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார் சண்டிமல். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு நீடித்த ஆட்டத்தில் மேத்யூஸ் 231 பந்துகளில் 13 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் சதமடித்தார்.
இந்த ஜோடியை 97-ஆவது ஓவரில் பிரித்தார் அஸ்வின். அவரது பந்துவீச்சை எதிர்கொண்ட மேத்யூஸ், கீப்பர் ரித்திமான் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அவர் 14 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 111 ரன்கள் எடுத்திருந்தார். மேத்யூஸ்-சண்டிமல் ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 181 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் சண்டிமல் 265 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் சதமடித்தார். மேத்யூûஸ அடுத்து வந்த சமரவிக்ரமா 33 ரன்களில் வெளியேற, சரியான பார்ட்னர்ஷிப் இன்றி தடுமாறினார் சண்டிமல். அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர, மறுமுனையில் ரோஷன் சில்வா, நிரோஷன் டிக்வெல்லா அடுத்தடுத்து டக் அவுட் ஆனதுடன், சுரங்கா லக்மல் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.
இவ்வாறாக 3-ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வர, இலங்கை 130 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்திருந்தது. சண்டிமல் 147, லக்ஷன் சன்டகன் ரன்கள் இன்றி ஆடி வருகின்றனர். இந்திய தரப்பில் அஸ்வின் அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஜடேஜா மற்றும் முகமது சமி ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இலங்கை ஆல் -அவுட்!! 163 ரன் லீடுடன் இந்திய களம்
