இந்தியா-இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (நவ்.24) காலை துவங்கவுள்ளது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் இருந்து காயமடைந்த சமி நீக்கப்பட்டுள்ளார். மேலும், ரோகித் சர்மா அணியில் சேக்கபட்டுள்ளார். அதே போல் துவக்க வீரர் சிகர் தவானுக்கு பதிலாக முரளி விஜயும் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு பதில் இஷாந்த் சர்மாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியா: எம்.விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, விருத்திமான் சஹா, ரோகித் சர்மா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, விஜய்சங்கர் அல்லது இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ்.
இலங்கை: கருணாரத்னே, சமரவிக்ரமா, சன்டிமால் (கேப்டன்), திரிமன்னே, மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா, தில்ருவான் பெரேரா, ஹெராத், சுரங்கா லக்மல், தசுன் ஷனகா, லகிரு கமேகே
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் இலங்கை அணி போராடி தோல்வியில் இருந்து தப்பி ‘டிரா’ செய்தது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று வலைபயிற்சியில் ஈடுபட்டனர்.
தென்ஆப்பிரிக்க தொடரை கருத்தில் கொண்டு கொல்கத்தா ஈடன்கார்டன் ஆடுகளம் புற்களுடன் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் தயார்படுத்தப்பட்டது. அது போலவே வேகப்பந்து வீச்சு கணிசமாக எடுபட்டது. உள்ளூரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தாத அபூர்வ நிகழ்வை அந்த டெஸ்டில் காண முடிந்தது.
இந்த டெஸ்ட் போட்டிக்கும் ஏறக்குறைய அதே போன்ற ஆடுகளமே தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் இந்த போட்டியிலும் முதல் 3 நாட்கள் வேகப்பந்து வீச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
நாக்பூர் ஆடுகளத்தை இந்திய வீரர்கள் புஜாரா, ரஹானே பரிசோதிக்கும் காட்சி
முந்தைய டெஸ்டில் மொத்தம் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார், திருமண பந்தத்தில் இணைவதால் எஞ்சிய இரு டெஸ்டிலும் அவர் விளையாடவில்லை. இதே போல் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தனிப்பட்ட காரணத்துக்காக விலகியுள்ளார். தவான் இடத்தில், முரளிவிஜய் ஆடுவார். புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா அல்லது புதுமுக ஆல்-ரவுண்டர் தமிழகத்தை சேர்ந்த விஜய்சங்கர் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இலங்கை அணியை பொறுத்தவரை, சில மாதங்களுக்கு முன்பு சொந்த மண்ணில் அடைந்த மோசமான தோல்வியுடன் ஒப்பிடும் போது கொல்கத்தா டெஸ்டில் ஓரளவு நன்றாகவே விளையாடி இருக்கிறது. அதுவே தங்களது நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளதாக அந்த அணி வீரர்கள் கூறுகிறார்கள். கடந்த ஆட்டத்தில் ரன்களை வாரி வழங்கிய லாஹிரு காமகே நீக்கப்பட்டு, விஷ்வா பெர்னாண்டோ சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.
மொத்தத்தில் ‘நம்பர் ஒன்’ அணியான இந்தியாவுக்கு, இலங்கை வீரர்கள் மறுபடியும் சவால் கொடுப்பார்களா? அல்லது பணிந்து போவார்களா? என்பதை காத்திருந்து ரசிப்போம்.
இந்த மைதானத்தில் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 3-ல் இந்தியா வெற்றியும், ஒன்றில் தோல்வியும் (2010-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக), ஒன்றில் டிராவும் (இங்கிலாந்துக்கு எதிராக) கண்டுள்ளது.