இருதரப்பு தொடரில் குறைந்த பட்சம் 4 இன்னிங்கில் விளையாடி 13 வீரர்கள் அவுட் ஆகாமல் இருந்திருக்கிறார்கள். அதில் இரண்டு வீரர்கள் இரு முறை அவுட் ஆகாமல் இருந்திருக்கிறார்கள். இதனால்,இந்த பட்டியலில் மொத்தம் 11 வீரர்கள் உள்ளார்கள்.
ஆனால், இங்கு ஒருமுறை கூட அவுட் ஆகாமல் அதிக ரன் அடித்த ஐந்து வீரர்களை பார்ப்போம்.
இமாட் வாசிம் (பாகிஸ்தான்) – 153 ரன்
2016-இல் இங்கிலாந்துக்கு சென்ற பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது, ஒரு முறை கூட இமாட் வாசிம் அவுட் ஆகவில்லை. 5 போட்டிகள் கொண்ட தொடரில், 4 முறை பேட்டிங் விளையாடிய வாசிம் அவுட் ஆகாமல் 153 ரன் அடித்தார். அந்த தொடரில் 17, 63, 57, 16 ரன் என அடித்து அவுட் ஆகாமல் இருந்தார். ஆனால், பாகிஸ்தான் அணி அந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் தான் வெற்றி பெற்றது.
டேமியன் மார்ட்டின் – 158 ரன்
1999/2000 ஆஸ்திரேலியா – நியூஸிலாந்து தொடரின் போது ஆஸ்திரேலியா அணியின் வீரர் மார்ட்டின் அவுட் ஆகாமல் 158 ரன் அடித்தார். 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டி மழையால் பாதித்தது. மீதம் உள்ள ஐந்து போட்டிகளிலும் விளையாடிய மார்ட்டின் 8, 1, 29, 4, 116 ரன் என் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார். அவர் சதம் அடித்த போட்டியில் மட்டும் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது.
மகேந்திர சிங் தோனி – 162 ரன்
2017 இந்தியா – இலங்கை விளையாடிய 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒருமுறை கூட தோனி அவுட் ஆகவில்லை. முதல் போட்டியில் பேட்டிங் விளையாடாத தோனி, அடுத்த 4 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி 162 ரன் சேர்த்தார். 45, 67, 49, 1 என ரன் அடித்து அவர் அவுட் ஆகாமல் இருந்தார். அந்த தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்றது.
மகேந்திர சிங் தோனி – 212 ரன்
மீண்டும் ஒருமுறை தோனி இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். 2011 இல் இங்கிலாந்துடன் விளையாடிய ஒருநாள் தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்றது. அந்த தொடரில் அவுட் ஆகாமல் 212 சேர்த்தார் தோனி. முதல் போட்டியில் 87, இரண்டாவது போட்டியில் களமிறங்காத தோனி அடுத்த மூன்று போட்டிகளில் 35, 15, 75 ரன் என அடித்து அசத்தினார். அந்த தொடரின் தொடர்நாயகன் விருதை தட்டி சென்றார் தோனி.
ஜாவேத் மியாண்டிட் – 234 ரன்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜாவேத் மியாண்டிட் 1982/83 இந்திய தொடரின் போது ஒரு போட்டியில் கூட அவுட் ஆகாமல், 234 ரன் சேர்த்தார். 4 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில், 106, 3, 119, 6 என அடித்து, இரண்டு ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார். அந்த தொடரை 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வென்றது.