ஆஸ்திரேலியாவில் இம்மாத இறுதியில் தொடங்கும் முத்தரப்பு டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியில் மூன்றரை ஆண்டுகளுக்குப்பின் ஸ்டீவ் ஸ்மித் சேர்க்கப்பட்டுள்ளார், அதேசமயம், அதிரடி ஆல்ரவுண்டர் மார்க் ஸ்டாய்னிஸ் நீக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாட உள்ளன. ஆஸ்திரேலிய அணி இலங்கையுடன் இம்மாதம் 27, 30 மற்றும் நவம்பர் 1-ம் தேதிகளில் அடிலெய்ட், பிரிஸ்பன், மெல்போர்ன் நகரங்களில் டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது

அதன்பின் நவம்பர் 3-ம் தேதி, 5 மற்றும் 8-ம்தேதிகளில் சிட்னி, கான்பெரேரா, பெர்த் ஆகிய நகரங்களில் நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது பாகிஸ்தான்.
இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் உலகக் கோப்பைப் போட்டியில் மோசமான ஃபார்மை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸை ஆஸி நிர்வாகம் கழற்றிவிட்டுள்ளது.
அதற்கு பதிலாக முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை அணிக்குள் ஆஸ்திரேலிய நிர்வாகம் கொண்டுவந்துள்ளது. கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு மொஹாலியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்மித் டி20 போட்டியில் விளையாடினார். அதன்பின் ஆஸ்திரேலிய அணியில் டி20 போட்டியில் இடம் பெறாமல் இருந்து ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகளுக்குப்பின் இடம் பெற்றுள்ளார்.
ஸ்மித் தவிர்த்து டேவிட் வார்னர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேப்டன் ஆரோன் பிஞ்ச், அலெக்ஸ் கேரி, ஆகியோர் இடம் பெருகின்றனர். இதில் காரே, கம்மின்ஸ் துணைக் கேப்டன்களாக நியமிக்கபக்பட்டுள்ளனர்.
மேலும், அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் லின், ஆர்கி ஷார்ட், நாதன் லயன் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக ஆஸ்டன் அகர், ஆஷ்டன் ஜம்பா அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

ஆஸி. அணி விவரம்:
ஆரோன் பிஞ்ச்(கேப்டன்), ஆஷ்டன் அகர், ஆலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல், பென் மெக்டார்மாட், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், பில்லி ஸ்டான்லேக், மிட்ஷெல் ஸ்டார்க், ஆஷ்டன் டர்னர், ஆன்ட்ரூ டை, டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா