நடப்பு உலகக்கோப்பை மழையினாலும் வீரர்கள் காயங்களினாலும் களையிழந்து வருகிறது. நல்ல நல்ல போட்டிகள் மழையினால் கைவிடப்பட வீரர்கள் காயம் ஒருபுறம் அணிகளை அச்சுறுத்தி வருகின்றன.
ஷிகர் தவண் அன்று கமின்ஸ் பவுன்சரில் கையில் அடிவாங்கி 2-3 போட்டிகளுக்கு இல்லை என்று கூறப்படுகிறது, ஆனால் அவர் உலகக்கோப்பையே முடிவுக்கு வருகிறதா என்ற ஐயம் பல தரப்புகளிலும் எழுந்து வருகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முக்கிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடமாட்டார் என்று ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவருக்குப் பதிலாக அதிரடி ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் அழைக்கப்பட்டுள்ளார்.
வரும் சனிக்கிழமை இலங்கைக்கு எதிரான போட்டிக்கு முன்பாக ஸ்டாய்னிஸ் காயம் மதிப்பிடப்பட்டு இவர் உலகக்கோப்பையில் தொடர முடியுமா இல்லையா என்பது அறிவிக்கப்படவுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 5வது ஓவரில் ஸ்டாய்னிஸ் காயமடைந்தார். பிறகு 48 மற்றும் 50வது ஓவரை வீசிய ஸ்டாய்னிஸ் தோனியை வெளியேற்ற அருமையான கேட்சை தன் பவுலிங்கில் பிடித்தார்.
ஸ்டாய்னிஸ் எத்தனை போட்டிகளில் ஆடமாட்டார் என்பது இன்னும் அறுதியிடப்படாததால் மிட்செல் மார்ஷ் அழைக்கப்பட்டுள்ளதாக ஆஸி. கேப்டன் ஏரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

முன்னதாக,
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்து அசத்தினார் ஷிகர் தவன். அப்போது அவருடைய பெருவிரலில் காயம் ஏற்பட்டது. காயத்தைப் பொருட்படுத்தாமல் விளையாடி சதமடித்தார். பிறகு அவர் ஃபீல்டிங் செய்ய வரவில்லை. இந்நிலையில் காயம் காரணமாக மூன்று வாரங்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காயம் குணமாக தவன் மூன்று வாரங்கள் ஓய்வெடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. லீட்ஸில் இன்று ஸ்கேன் எடுத்த பிறகு நிலவரம் தெளிவாகத் தெரியவரும் என்று தெரிகிறது. இதையடுத்து இந்திய அணி தவன் குறித்து ஒரு முடிவெடுக்கவுள்ளது.

இதனால் அடுத்து நடைபெறவுள்ள நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் தவன் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வரும் ஆட்டங்களில் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் இணைந்து கேஎல் ராகுல் விளையாடவுள்ளார்.