தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக செயல்படும்போது, எனது ஆட்டன் திறன் எப்படி பாதிக்கும் என்பது உறுதியாக தெரியாது என டி காக் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக குயின்டான் டி காக் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருவேளை இந்தியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடினால், தொடர்ந்து அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான கேப்டனாகவும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
பொதுவாக ஒரு பேட்ஸ்மேன் கேப்டன் பதவியை ஏற்கும்போது, அவரது பேட்டிங் திறன் சற்று குறையும். அப்படி எனது ஆட்டம் பாதிக்குமா எனபது உறுதியாக தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குயின்டன் டி காக் கூறுகையில் ‘‘விக்கெட் கீப்பிங் பணியுடன் கேப்டன் பதவியையும் சேர்த்து கவனிப்பது குறித்து பெரிய அளவில் கவலை கொள்ள தேவையில்லை. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் புதிய படிக்கல். எனக்கு கூடுதல் பொறுப்பை கொடுக்கும். நேர்மறையாகவோ, சாதகமாகவே கேப்டன் பதவி என்னுடைய ஆட்டத்தை எப்படி பாதிக்கும் என்பது உறுதியாக தெரியாது’’ என்றார்.

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகளும் மூன்று 20 ஓவர் போட்டி, 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றன.
கடந்த 15-ந்தேதி தர்மசாலாவில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா மோத இருந்த முதலாவது 20 ஓவர் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இரு அணிகள் மோதும் இரண்டாவது 20 ஓவர் போட்டி நாளை மொகாலியில் நடக்கிறது. இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
குயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணியில் ரீஜா ஹென்ரிக்ஸ், பவுமா, வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர் ஆகிய பேட்ஸ்மேன்களும் ஆல்-ரவுண்டர்கள் பெலுக்வாயோ, வெய்ன் பிரிட்டோரியஸ் ஆகியோரும் உள்ளனர்.

பந்து வீச்சில் ரபரா, ஜூனியர் டலா, தப்ரைஸ் ஷம்சி, நார்ஜே, போர்ச்சுன், பெயூரன் ஹென்ரிக்ஸ் ஆகியோர் உள்ளனர். முன்னணி வீரர்கள் ஓய்வு பெற்று விட்டதால் தென் ஆப்பிரிக்க அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாப் டு பிளிஸ்சிஸ்சுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு குயின்டான் டி காக்குக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இரு அணிகளிலும் இளம் வீரர்கள் இடம் பெற்று உள்ளதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.