இந்தியாவின் நடுவரிசை பலவீனமாக இருக்கிறது, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அறிவுரை கூறியுள்ளார்.
உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் பரபரப்பான ஆட்டம் ஓல்டுடிராபோர்ட் மைதானத்தில் நாளை நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்த பல்வேறு யுத்திகளை பாகிஸ்தான் அணி கையாண்டு, ஆலோசித்து வருகிறது.
பாகிஸ்தான் அணிக்கு முன்னாள் கேப்டனும், ஸ்விங் பந்துவீச்சின் சுல்தான் என்று வர்ணிக்கப்படும் வாசிம் அக்ரம் அறிவுரை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
இந்திய அணியிடம் வலுவான டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ரோஹித் சர்மா, விராட் கோலி, தவண் இல்லாவிட்டாலும் கே.எல்.ராகுல் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஆனால், என்னைப் பொருத்தவரை நடுவரிசையில் வலிமையான பேட்ஸ்மேன்கள் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். ஆதலால், இந்திய அணியின் நடுவரிசையை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் குறிவைத்து தாக்க வேண்டும்.
அனுபவம் மிக்க வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் இவரை தொடக்கத்தில் பந்துவீசச் செய்யாமல், இந்தியாவின் நடுவரிசைக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பந்துவீச அழைக்க வேண்டும்.
பாகிஸ்தானின் பாபர் ஆசம் சிறந்த பேட்ஸ்மேன். அவரை கோலியுடன் ஒப்பிட்டு நெருக்கடி ஏற்படுத்தக்கூடாது. அவரை நிலைத்தன்மையுடன் பேட் செய்துவரும் அவரை சுதந்திரமாக விளையாட அனுமதிக்க வேண்டும்.
இன்றைய சூழலில் இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துகளை ஸ்விங் செய்ய மணிக்கட்டை சுழற்ற வேண்டும். ஆனால், எந்த வேகப்பந்துவீச்சாளர்கள் மணிக்கட்டை சூழற்றி வேகப்பந்துவீசுகிறார்கள்?

என்னைப் பொருத்தவரை கூக்கபரா பந்துகள் ஸ்விங் செய்வதற்கு சரியான பந்துகள் அல்ல. வழக்கமான டியூக் பந்துகள்தான் ஸ்விங் செய்ய வசதியாக இருக்கும். ஆனால், ஏன் ஐசிசி டியூக்வகை பந்துகளை தேர்வுசெய்வதில்லை எனத் தெரியவில்லை. டியூக் பந்துகள் இருந்தால் அதிகமாக ஸ்விங் ஆகும் பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும். 1999ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் இந்த பந்துகள்தான் பயன்படுத்தப்பட்டன.
இவ்வாறு வாசிம் அக்ரம் தெரிவித்தார்.