இந்திய மகளிர் ஹாக்கி அணியில் ஆடிய வீராங்கனை ஒருவர் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குடும்பத்தார் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஹரியானா மாநிலம், சோன்பட் மாவட்டத்தை சேர்ந்த 20 வயதான ஜோதி குப்தா அந்த வீராங்கனை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்திய அணியில் முன்கள வீராங்கனையாக விளையாடிவந்த ஜோதி குப்தா ஆசிய போட்டியில் விளையாடி உள்ளார். கடந்த 2ம் தேதி ரோடாக்கில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு சான்றிதழில் உள்ள பெயர் எழுத்து பிழைகளை சரி செய்ய செல்வதாக பெற்றோரிடம் கூறியவிட்டு சென்றுள்ளார் ஜோதி குப்தா. அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் அவர் ரெவாரி ரயில் நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார். ஜோதி குப்தா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. ஆனால் ஜோதி குப்தா குடும்பத்தார், இது தற்கொலையாக இருக்க முடியாது என கூறுகிறார்கள். இதில் ஏதோ சதி இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள்.