தென் ஆப்பிரிக்கா அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் டெம்பா பவுமா என்று கடுமையாக சாடியிருக்கிறார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி.
டி20 உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி நான்கு போட்டிகளின் முடிவில் 5 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தது. கடைசி போட்டி நெதர்லாந்து அணிக்கு எதிராக என்பதால், எளிதாக வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி விடும் என பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர். அதன் காரணமாக உலக கோப்பை தொடரிலிருந்தும் வெளியேறியுள்ளது தென்னாபிரிக்கா. ஆதலால் பாகிஸ்தான் அணி அடுத்து சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.
பலம் பொருந்திய தென்னாபிரிக்கா அணி இப்படி சொதப்பன ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதற்கு முக்கிய காரணமும், உலக கோப்பையில் இருந்து வெளியேறியதற்கான காரணமும் ஒன்றுதான் என்று கடுமையாக சாடியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும் தற்போது இலங்கை அணியின் கிரிக்கெட் இயக்குனருமான டாம் மூடி.
“சந்தேகமே இல்லை. டெம்பா பவுமா யானை பலம் பொருந்திய வீரர். ஆனால் வீரரின் பார்ம் என்பது மிகவும் முக்கியம். பவுமாவை விட சிறந்த பார்மில் இருக்கும் வீரர்கள் பெஞ்ச்சில் அமர்ந்திருக்கிறார்கள்.
அணியில் பிளேயிங் லெவன் பற்றி விவாதிக்கும் போது இதைத்தான் பேசியிருக்க வேண்டும். யார் நல்ல பார்மில் இருக்கிறார்களோ, அவர்கள் அன்றைய போட்டியில் விளையாட வைக்கப்பட்டிருக்க வேண்டும். கேப்டன் என்கிற காரணத்திற்காக பார்மில் இல்லை என்றாலும் விளையாட வேண்டும் என்ற அர்த்தம் இல்லை.
எந்த ஒரு கேப்டனுக்கும் அணியின் வெற்றி மட்டுமே குறிக்கோளாக இருக்க முடியும்.” என்றார்.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் உடன் டெம்போ பவுமாவை ஒப்பிட்டு பேசிய டாம் மூடி, “ஆஸ்திரேலியா அணியும் இப்படி ஒரு சிக்கலை சந்தித்து இருக்கிறது. அவர்களது கேப்டன் ஆரோன் பின்ச் நல்ல பார்மில் இல்லை. ஆனால் தொடர்ச்சியாக விளையாடினார். சிறப்பான பார்மில் இருக்கும் சில ஆஸி., வீரர்கள் முக்கியமான கட்டங்களில் வெளியில் அமர்த்தப்பட்டு இருக்கின்றனர். அது அந்த அணியின் வீழ்ச்சிக்கு காரணமாகியது.” என்றார்.