ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 302 ரன்களும், ஆஸ்திரேலியா 328 ரன்களும் எடுத்தன. 26 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3–வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 33 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 4–வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து வீரர்கள், ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். ஸ்டோன்மான் (27 ரன்), கேப்டன் ஜோ ரூட் (51 ரன்), மொயீன் அலி (40 ரன்), பேர்ஸ்டோ (42 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.

71.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 2–வது இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. அந்த அணி கடைசி 10 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை தாரைவார்த்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 170 ரன்கள் இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் துணை கேப்டன் டேவிட் வார்னரும், அறிமுக வீரர் கேமரூன் பான்கிராப்ட்டும் வலுவான அஸ்திவாரம் அமைத்தனர். 6 பவுலர்களை பயன்படுத்தியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.

நேற்றைய ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி 34 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் சேர்த்து இருந்தது. 5-வது நாள் ஆட்டம் இன்றும் துவங்கியதும், ஆஸ்திரேலிய அணி வெற்றியை நோக்கி எந்த சிரமமும் இன்றி எளிதாக நடைபோட்டது. இங்கிலாந்து பந்து வீச்சை சகட்டுமேனிக்கு வார்னரும் பன்கிராப்டும் விளாசினார். இதனால், 50 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 173 ரன்களை சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றியை ருசித்தது. வார்னர் 87 ரன்களுடனும் பன்கிராப்ட் 82 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.