கேப்டன் கோலியின் கருத்து எந்த வகையிலும் பயிற்சியாளர் நியமனத்தில் எதிரொலிக்கவில்லை என சிஏசி தலைவர் கபில் தேவ் கூறியுள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போதுள்ள ரவிசாஸ்திரியே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கபில் தேவ், அன்ஷுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட சிஏசி ஒருமனதாக சாஸ்திரியை தேர்வு செய்தது.
கேப்டன் கோலி முன்பு கூறுகையில், ரவிசாஸ்திரி அனைத்து வீரர்களுடனும் நன்கு பழகி உள்ளார். அணியின் அனைத்து அம்சங்களையும் அறிந்துள்ளதால், அவரையே தேர்வு செய்தால் நன்றாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கபில் தேவ் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தலைமை பயிற்சியாளர் நியமனத்தில் கோலியின் கருத்து எந்த வகையிலும் எதிரொலிக்கவில்லை. நாங்கள் எவர் பேச்சையும் கேட்கவில்லை.
கோலியின் கருத்தை கேட்டிருந்தால், அணியின் ஒட்டுமொத்த வீரர்களின் கருத்தையும் கேட்டிருப்போம். இதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.
ஐசிசி போட்டிகளில் அரையிறுதியோடு அணி வெளியேறியது குறித்து கேட்டபோது, அவர் கூறுகையில், உலகக் கோப்பை வெல்லாத அணியின் மேலாளரை நீக்க வேண்டுமா?, ஒட்டுமொத்த சூழநிலையும் ஆய்வு செய்தோம்.
மேலும் அவரது விளக்கத்தையும் கேட்டோம். சாஸ்திரியின் தகவல் தொடர்பு திறன் பெரிய வித்தியாசத்தை காண்பிக்கிறது. அனைவரும் சிறந்தவர்கள் தான். ஆனால் தற்போதைய பயிற்சியாளராக உள்ளது சாஸ்திரிக்கு கூடுதல் பலமாக அமைந்தது என்றார். ஏற்கெனவே கடந்த 2018 டிசம்பரில் மகளிர் அணியின் பயிற்சியாளராக டபிள்யு வி.ராமனை தேர்வு செய்தது சிஏசி.
இந்நிலையில் இந்தக் குழுவின் பரிந்துரையில் மைக் ஹெசனின் பெயரில் எழுத்து பிழை இருந்தது. அதாவது அவரது பெயர் ‘Mike Hassen’ எழுத்து பிழையுடன் குறிக்கப்பட்டிருந்தது. அவருடைய சரியான பெயர் ‘Mike Hessen’. இது தொடர்பாக ட்விட்டரில் பலர் தங்களின் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதில் அவர்கள், “இந்தக் குழுவினால் ஒரு பெயரை கூட சரியாக எழுத முடியவில்லையே? இவர்கள் எவ்வாறு சரியாக இந்திய அணியின் பயிற்சியாளரை தேர்ந்தெடுத்திருப்பார்கள்?” எனப் பதிவிட்டுள்ளனர்.
மேலும் சிலர், “பயிற்சியாளர் பதவிக்கு ஏற்கெனவே நபரை தேர்ந்தெடுத்து விட்டுதான் நேர்காணலை நடத்தியுள்ளனர். அதனால் தான் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் கவனம் செலுத்தவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.