முதல் சில ஓவர்களில் நன்றாக ஆட்டிவிட்டால் பின்னர் எளிதாக வெற்றி பெறலாம் என்று நினைத்து ஆடினேன் இவ்வாறு தான் இந்த போட்டியில் வெற்றி பெற்றோம் என்று ஆட்டநாயகன் ரோகித் சர்மா கூறியுள்ளார்
உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றிகரமாக துவக்கியது. சகால் சுழல் ஜாலம் காட்ட, பேட்டிங்கில் ரோகித் சதம் விளாச, தென் ஆப்ரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சவுத்தாம்ப்டனில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசி பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் முகமது ஷமி, ஜடேஜாவுக்கு இடம் கிடைக்கவில்லை. தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கரும் இடம் பெறவில்லை. தென் ஆப்ரிக்க அணியில் ஆம்லா அணிக்கு திரும்பினார்.
பும்ரா அபாரம்
தென் ஆப்ரிக்க அணிக்கு துவக்கத்தில் ‘ஷாக்’ காத்திருந்தது. பும்ரா ‘வேகத்தில்’ மிரட்டினார். முதலில் ஆம்லாவை (6) அவுட்டாக்கினார். அடுத்த சில நிமிடத்தில் குயின்டனை (10) திருப்பி அனுப்பினார். டுபிளசி, வான் டெர் துசென் இணைந்து அணியை மீட்க முயன்றனர்.
சகால் ‘சூப்பர்’
இந்நிலையில் பந்தை சுழற்றிய சகால், தனது 2வது ஓவரின் முதல் பந்தில் துசெனை (22) போல்டாக்கினார். கடைசி பந்தில் டுபிளசியை (38) போல்டாக்கி அசத்தினார். டுமினி(3), குல்தீப் பந்தில் அவுட்டானார். மில்லர் (31), சகாலிடம் ‘பிடி’ கொடுத்தார்.

புவனேஷ்வர் ‘இரண்டு’
மீண்டும் மிரட்டிய சகாலிடம், பெலுக்வாயோ (34) ‘சரண்’ அடைந்தார். கிறிஸ் மோரிஸ், ரபாடா இணைந்து போராட, ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. 2003 க்குப் பின் உலக கோப்பை தொடரில் 8வது விக்கெட்டுக்கு 3வது முறையாக 50 ரன்னுக்கும் மேல் (66 ரன்) எடுத்தது தென் ஆப்ரிக்கா. புவனேஷ்வர் வீசிய கடைசி ஓவரில் கிறிஸ் மோரிஸ் (42), இம்ரான் தாகிர் (0) சிக்கினர்.
தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்தது. ரபாடா (31) அவுட்டாகாமல் இருந்தார். இந்திய அணியின் சகால் 4, பும்ரா 2, புவனேஷ்வர் 2 விக்கெட் வீழ்த்தினர்.
கோஹ்லி ஏமாற்றம்
எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணி துவக்கத்தில் தடுமாறியது. ரபாடா ‘வேகத்தில்’ தவான் (8) வீழ்ந்தார். கேப்டன் கோஹ்லி (18), குயின்டனின் அசத்தல் ‘கேட்ச்சில்’ அவுட்டானார்.

ரோகித் சதம்
பொறுப்பாக ஆடிய ரோகித் சர்மா, அவ்வப்போது பவுண்டரி அடிக்க ஸ்கோர் சீராக உயர்ந்தது. மறுபக்கம் லோகேஷ் ராகுல் 26 ரன்னுக்கு அவுட்டானார். அடுத்து வந்த தோனி, மோரிஸ் பந்தில் பவுண்டரி அடித்தார். பலமுறை தப்பிப்பிழைத்த ரோகித் சர்மா, ஒருநாள் அரங்கில் 23வது சதம் அடித்தார். தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக இது 3வது சதமாக அமைந்தது. தவிர உலக கோப்பை அரங்கில் ரோகித்தின் 2வது சதம் இது.
4வது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்த போது, தோனி (34) அவுட்டானார். பாண்ட்யா வந்த வேகத்தில் மூன்று பவுண்டரி அடிக்க இந்திய அணி 47.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா (122), பாண்ட்யா (15) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை ரோகித் தட்டிச் சென்றார்.

அதிர்ஷ்ட மழை
ரோகித் சர்மாவுக்கு நேற்று ராசியான நாள் போல. இவர் 1 ரன் எடுத்த போது கொடுத்த வாய்ப்பை டுபிளசி நழுவ விட்டார். 22 ரன்னில் எல்.பி.டபிள்யு., அப்பீலில் தப்பினார். 50 ரன்னில் ஆம்லா, 107 ரன்னில் மில்லர் என பலரும் ரோகித் கொடுத்த ‘கேட்ச்சை’ கோட்டை விட, அதிர்ஷ்ட மழையில் நனைந்தார்.
தேறுமா தென் ஆப்ரிக்கா
உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து, வங்கதேசம், இந்திய அணிகளிடம் தொடர்ந்து தோற்றது தென் ஆப்ரிக்கா. மீதமுள்ள 6 போட்டிகளில் குறைந்தது 5ல் வென்றால் மட்டுமே அரையிறுதி குறித்து யோசிக்க முடியும்.
பும்ரா ‘50’
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, 25. கடந்த 2016 , ஜன., 23ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். நேற்று தனது 50 வது போட்டியில் பங்கேற்றார். ‘வேகத்தில்’ ஜோலித்த இவர் 2 விக்கெட் வீழ்த்தினார்.