மகேந்திர சிங் தோனியுடன் தான் மேற்கொண்ட 2016 உலகக்கோப்பை டி20 போட்டியின் கூட்டணி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி ‘மறக்க முடியாத இரவு’ என்று புகழாரம் சூட்டி பதிவிட்ட ட்விட்டரினால் தோனி ஓய்வு பெறப்போகிறார் என்ற கற்பிதங்கள் கிளம்பின. இந்நிலையில் தோனியின் மனைவி சாக்ஷி ‘ஓய்வு பற்றிய பேச்செல்லாம் வதந்திகள்’ என்று தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எங்கிருந்து இது தொடங்கியது என்றால் விராட் கோலி 2016 டி20 உலககக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோனியுடன் சேர்ந்து வெற்றிக்கு இட்டுச் சென்றதை மறக்க முடியாத இரவு என்று ட்வீட் செய்தார். கோலி அந்தப் போட்டியில் 51 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். தோனி 18 நாட் அவுட், இருவரும் சேர்ந்து 67 ரன்கள் என்ற வெற்றிக்கூட்டணியை அமைத்தனர்.
“அந்த ஒரு போட்டியை நான் மறக்க முடியவில்லை. சிறப்புவாய்ந்த இரவு. இந்த மனிதர் (தோனி) பிட்னெஸ் சோதனை போல் என்னை ஓட வைத்தார்.” என்ற வாசகத்துடன் தானும் தோனியும் உள்ள புகைப்படத்தைப் பகிர்ந்தார் தோனி.

இந்த பதிவு சில நிமிடங்களிலேயே சமூகவலைத்தளப் பக்கங்களில் தோனி ஓய்வு பெறுகிறார், இன்று மாலை அறிவிக்கிறார் என்பதாக வதந்தியாகவும் கற்பிதங்களாகவும் மாறின.
தோனி தற்போது அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இதனையடுத்து இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் அணியை அறிவிக்கும் சந்திப்பில் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்திடம் இது கேள்வியாக வர அவர் உடனே, “எங்கிருந்துதான் இத்தகைய வதந்திகள் தொடங்குகிறதோ நான் அறியேன். நிச்சயம் அது உண்மையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.” என்று பதிலளித்தார்.
தோனியின் ஓய்வு குறித்து சில காலங்களாகவே ஏகப்பட்ட கற்பிதங்கள் உலாவருவது குறிப்பிடத்தக்கது.