அமைதியாக விராட் கோலி போல உருவாகி வருகிறார் இவர் என்று இளம் வீரரை பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார் தினேஷ் கார்த்திக்.
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் டி20 போட்டிகளில் பெரிதளவில் விளையாடவில்லை என்றாலும், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து இடம் பிடித்து ஒவ்வொரு போட்டியிலும் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
இந்த 2022 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் 721 ரன்கள் அடித்திருக்கிறார். சராசரி 60 ஆகும். மேலும் இவரது ஸ்ட்ரைக் ரேட் 92 ஆகும். தொடர்ச்சியாக தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்து வரும் ஷ்ரேயாஸ் ஐயர் கடைசி பத்து போட்டிகளில் ஐந்து அரை சதம் மற்றும் ஒரு சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அனைவரும் டி20 போட்டிகளில் கவனம் செலுத்தி வந்த நிலையில் சைலன்ட்டாக ஒருநாள் போட்டிகளில் தனது முழு திறமையை வெளிப்படுத்தி செயல்பட்டு வரும் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்கு அடுத்த விராட் கோலியாக உருவெடுப்பார் என்று தினேஷ் கார்த்திக் புகழாரம் சூட்டி இருக்கிறார். அவர் கூறுகையில்,
“நான் ஒன்றும் இல்லாத ஒன்றை புதிதாக கூறவில்லை. புள்ளி விவரங்கள் தெளிவாக கூறுகிறது. 700 ரன்களுக்கும் மேல் ஷ்ரேயாஸ் ஐயர் அடித்திருக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் தனது பேட்டிங் மூலம் தனி ஆளாக தெரிகிறார். நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர், தென் ஆப்பிரிக்கா தொடர், வெஸ்ட் இண்டீஸ் தொடர் என ஒவ்வொரு தொடரிலும் ஒருநாள் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டிருக்கிறார்.
ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஷாட் பந்து பிரச்சனையாக இருந்தது. அவருக்கு ஷாட் பந்து வீசி விக்கெட் வீழ்த்தி வந்தனர். ஆனால் சமீப காலமாக அதை சரி செய்து கொண்டு நன்றாக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டுகளில் விராட் கோலி எப்படி இறுதிவரை களத்தில் நின்று ஆட்டம் இழக்காமல் 120-130 ரன்கள் அடிப்பாரோ, அதே போன்ற ஒரு ரோலை சமீப காலமாக ஷ்ரேயாஸ் ஐயர் செய்து வருகிறார். நாம் பெரிதளவில் கவனிக்காமல் விட்டிருக்கிறோம். அவரது புள்ளி விவரங்களை எடுத்துப் பாருங்கள்.” என்று பேசினார் தினேஷ் கார்த்திக்.