இலங்கை அணியுடனான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை கைப்பற்றிய இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்றுள்ளதை தொடர்ந்து இரு அணிகளிடையே மூன்று டெஸ்ட், ஆறு ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் நடைபெற இருக்கிறது.

தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணம் குறித்து இந்திய அணி துணை கேப்டன் ரகானே கூறியதாவது:-
தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்காக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் அறிவோம்.
வீரர்கள் அளிக்கும் பங்களிப்பை பொறுத்தே வெற்றி, தோல்வி அமையும். எதையும் நாங்கள் சாதாரணமாக எடுத்து கொள்ளமாட்டோம். எவ்வித சவாலுக்கும் தயாராகவே இருக்கிறோம். அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இந்திய அணி வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டிருப்பதால் தென்னாப்பிரிக்க மண்ணிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர்.

தென்னாப்பிரிக்கா அணி தலைசிறந்த அணியாக உள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவது தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு சாதகமாக இருக்கும். எனினும் தென்னாப்பிரிக்க அணியை குறைத்து மதிப்பிடாமல், எங்களது முழு திறமையையும் வெளிப்படுத்துவோம்.

பேட்டிங் அல்லது ஃபீல்டிங் என அனைத்து வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனக்கு பொருப்பேற்று கொள்வது மிகவும் பிடித்தமானதாகும். அந்த வகையில் நாட்டுக்கு என்னால் முடிந்தவற்றை செய்ய அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். துணை கேப்டன் பொறுப்பு பிடித்திருக்கிறது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் வெற்றியாளனாக இருக்க விரும்புகிறேன்.

தென்னாப்பிரிக்காவில் பயிற்சி ஆட்டம் நடைபெறாத நிலையிலும், இந்திய அணி வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என ரகானே நம்பிக்கை தெரிவித்துள்ளார். பேட்டிங் பயிற்சி பெற சிறப்பான பந்து வீச்சாளர்களை தேர்வு செய்து அனுப்பியுள்ள அணி நிர்வாகத்திற்கு ரகானே நன்றி தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க மண்ணில் சிறப்பான பயிற்சியை பெற இது உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.