மூன்றாவது ஒருநாள் போட்டியில் இரண்டு இந்திய வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என மறைமுகமாக ரோகித் சர்மா கூறியுள்ளார்.
நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு வந்து முதல் கட்டமாக ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரண்டையும் இந்திய அணி கைப்பற்றி தொடரையும் கைப்பற்றி விட்டது.
இந்திய மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும், இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டனர்.
முதல் ஒருநாள் போட்டியில் சிராஜ் நான்கு விக்கெட்டுகளையும் முகமது சமி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இரண்டாவது ஒருநாள் போட்டியில் சமி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார். 6 ஓவர்களில் வெறும் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
இரண்டாவது போட்டியில் முகமது சிராஜ் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்திருந்தாலும், ஆறு ஓவர்களில் ஒரு மெய்டன் உட்பட 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து பந்துவீச்சில் சிறப்பாக தாக்குதல் நடத்தினார். இலங்கை அணியுடன் நடந்த ஒருநாள் தொடரிலும் சிராஜ் அபாரமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவருக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக போட்டி முடிந்த பின்னர் பேட்டியளித்த ரோகித் சர்மா சூசகமாக கூறினார்.
நியூசிலாந்து தொடர் முடிவுற்றவுடன் இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவுடன் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்குள் இந்திய அணி செல்ல முடியும்.
ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் உரிய உடல் நிலையில் இருக்க வேண்டும், போதிய ஓய்வு அதற்காக தேவைப்படுகிறது. இந்த காரணத்திற்காக மூன்றாவது ஒருநாள் போட்டியில் இவர்கள் இருவருக்கும் ஓய்வளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதேபோல் நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரை இந்தியா ஏற்கனவே கைப்பற்றிவிட்டதால் ரோகித் சர்மா இந்த முடிவிற்கு வந்திருப்பதாக தெரிகிறது.
ஷமி, சிராஜ் இருவருக்கும் பதிலாக உம்ரான் மாலிக் உள்ளே எடுத்து வரப்படலாம். இன்னொரு வீரர் யார் என்பதை பொறுத்திருந்துதான் நாம் காண வேண்டும்.