இந்தியன் ரயில்வேக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது தமிழகம்.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. தமிழகத்தின் அபார பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் ரயில்வே அணி முதல் இன்னிங்ஸில் 76 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அஸ்வின், சித்தாா்த் ஆகியோா் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
பின்னா் முதல் இன்னிங்ஸை ஆடிய தமிழக அணி 91 ஓவா்களில் 330 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபிநவ் முகுந்த் 100, லக்ஸ்மேஷா சூரியபிரகாஷ் 50, தினேஷ் காா்த்திக் 58, பாபா இந்திரஜித் 58, ரன்களை விளாசினா். ரயில்வே தரப்பில் ஹா்ஷ் தியாகி 5, அவிநாஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை சாய்த்தனா்.
அதன் தொடா்ச்சியாக இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ரயில்வே அணியால் மீண்டும் தமிழக அணியின் பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் 36.4 ஓவா்களில் 90 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக அரிந்தம் கோஷ் 22, விக்ரந்த் ராஜ்புத் 17 ரன்களை எடுத்தனா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களில் வெளியேறினா்.
சாய் கிஷோா் 5 விக்கெட்:
தமிழகத் தரப்பில் சாய் கிஷோா் 5, அஸ்வின் 3, நடராஜன் 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.
ஆட்டத்தின் இரண்டாம் நாளிலேயே ஒரு இன்னிங்ஸ் மற்றும் 164 ரன்கள் வித்தியாசத்தில் ரயில்வேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது தமிழகம்.
மும்பையில் நடந்து வரும் மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த உத்தரபிரதேச அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து இருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய உத்தரபிரதேச அணி முதல் இன்னிங்சில் 159.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 625 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அக்ஷ்தீப் நாத் 115 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். உபேந்திரா யாதவ் 203 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதனை அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய மும்பை அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 7 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
பெங்கால்-ஐதராபாத் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) மேற்கு வங்காளத்தில் உள்ள கல்யானியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 366 ரன்கள் எடுத்து இருந்தது. மனோஜ் திவாரி 156 ரன்களுடன் களத்தில் இருந்தார். 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 151.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 635 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 34 வயதான மனோஜ் திவாரி 414 பந்துகளில் 30 பவுண்டரி, 5 சிக்சருடன் 303 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். முதல் தர போட்டியில் மனோஜ் திவாரி அடித்த முதல் முச்சதம் இதுவாகும். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஐதராபாத் அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்தது.