தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் 5-வது சீசன் ஜூன் 10-ந்தேதி கோவையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டிஎன்பிஎல் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இதுவரை 4 தொடர்கள் நடைபெற்றுள்ளன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 முறையும் (2017, 2019), டூட்டி பேட்ரியாட்ஸ் (2016), மதுரை பாந்தர்ஸ் (2018) ஆகியவை தலா ஒரு தடவையும் டிஎன்பிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளன.
8 அணிகள் பங்கேற்கும் 5-வது டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் ஜூன் 10-ந்தேதி தொடங்குகிறது. அன்று இரவு 7 மணிக்கு அங்குள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் – திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். இறுதிப்போட்டி நெல்லையில் ஜூலை 12-ந் தேதி நடைபெறுகிறது.
நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தனது லீக் ஆட்டங்களில் ஜூன் 14-ந்தேதி திருப்பூர் தமிழன்ஸ் அணியையும், ஜூன் 17-ந்தேதி திருச்சி வாரியர்ஸ் அணியையும், ஜூன் 19-ந்தேதி காஞ்சி வீரன்ஸ் அணியையும், ஜூன் 21-ந்தேதி மதுரை பாந்தர்ஸ் அணியையும், ஜூன் 28-ந்தேதி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியையும், ஜூலை 3-ந் தேதி சேலம் ஸ்பார்டன்ஸ் அணியையும், ஜூலை 5-ந்தேதி கோவை கிங்ஸ் அணியையும் சந்திக்கிறது.
132 வீரா்கள் தோ்வு:
ஏலத்தில் தோ்வு செய்யப்பட்ட 132 வீரா்களில் 67 போ் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள். மதுரை பேந்தா்ஸ் அதிகபட்சமாக 11 வீரா்களையும், கோவை லைக்கா, சேலம் ஸ்பாா்டன்ஸ் தலா 9 வீரா்களையும் தோ்வு செய்தன. தக்க வைக்கப்பட்ட வீரா்களில் பெரும்பாலோா் ரூ.3 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டனா்.
17 சுற்றுகள் ஏலத்தில் வி.பி. காஞ்சி வீரன்ஸ் 15 வீரா்களையும், சேலம் ஸ்பாா்டன்ஸ், கோவை லைக்கா தலா 16 வீரா்களையும் மொத்தம் தோ்வு செய்தன.
சேப்பாக் சூப்பா் கில்லீஸ் என்.ஜெகதீசனை வாங்கியது. வி.பி. காஞ்சி வீரன்ஸ் அணியில் பாபா இந்திரஜித், பிரதோஷ் ரஞ்சன் பால், அா்ஜூன் மூா்த்தி போன்ற நட்சத்திர வீரா்கள் வாங்கப்பட்டனா். இதனால் அணி கூடுதல் பலம் பெற்றுள்ளது என கேப்டன் பாபா அபராஜித் தெரிவித்தாா்.
2 வெளிமாநில வீரா்களை சோ்க்க வாய்ப்பு:
ஒவ்வொரு அணியும் 2 வெளிமாநில வீரா்களை சோ்க்கலாம். இதற்காக தனி தோ்வு வரும் மே மாதம் நடைபெறும். சேலம், கோவையில் டிஎன்பிஎல் ஆட்டங்கள் நடத்தப்படுவது மேலும் வளா்ச்சியாக அமையும். மாவட்டங்களில் கிரிக்கெட் அதிகளவில் பரவும் என டிஎன்சிஏ தலைவா் ரூபா குருநாத் கூறினாா்.