இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு இனி ரெஸ்ட் என்பது இருக்கக் கூடாது என கடுமையாக சாடியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.
டி20 உலககோப்பையில் இருந்து அரைஇறுதி சுற்றுடன் இந்திய அணி வெளியேறியதற்கு பிறகு, சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் சரிவர அமையவில்லை.
நியூசிலாந்து சென்று டி20 தொடரை இந்திய அணி விளையாடி 1-0 என்ற கணத்தில் கைப்பற்றியது. அதன் பிறகு நடந்த ஒரு நாள் தொடரை 0-1 என இழந்தது. நியூசிலாந்து தொடரை முடித்துவிட்டு வங்கதேசம் வந்தது இந்திய அணி.
வங்கதேசத்துடன் நடந்த ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி தொடரை இழந்தது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க இமாலய வெற்றி பெற்றாலும், இந்த வெற்றி நம்பிக்கையை கொடுத்ததே தவிர தொடரை வென்றுத் தரவில்லை.
இந்நிலையில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் தீவிரமாக இல்லாமல், முக்கியமான தொடர்களில் வேண்டிய நேரத்திற்கு ஓய்வுகளை எடுத்துக்கொள்கின்றனர் என சாடினார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.
“இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு நிறைய ஓய்வு கொடுக்கப்படுவதாக தெரிகிறது. கடந்த ஒன்றைரை ஆண்டில் இது அதிகரித்து இருக்கிறது. அப்படியே அவர்களுக்கு ஓய்வு வேண்டுமென்றால் ஐபிஎல் போட்டிகளின் போது எடுத்துக் கொள்ளட்டும். எதற்காக சர்வதேச போட்டிகளை விளையாடாமல் தவிர்க்கிறீர்கள்?.” என்றார்.
“ஆசியகோப்பைக்கு முன்பு நடத்தப்பட்ட ஜிம்பாப்வே தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் விளையாடவில்லை. அப்போது என்ன காரணத்திற்காக ஓய்வு கொடுக்கப்பட்டது? ஆசியகோப்பை முக்கியமானதாக இல்லையா?. நியூசிலாந்து ஒருநாள் தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது ஏன்?.” என சரமாரி கேள்விகளை முன் வைத்தார் ஆகாஷ் சோப்ரா.
மேலும் பேசிய அவர், “இனியும் சீனியர் வீரர்களுக்கு அவசியம் ஓய்வு வேண்டுமென்றால், ஐபிஎல் அல்லது டி20 போட்டிகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். 2023 ஆம் ஆண்டு முழுமையாக ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும். இந்த உலகக் கோப்பை நமக்கு மிகவும் முக்கியமானது.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா அணியிலும் சீனியர் வீரர்கள் அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொண்டதால் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் அவர்களால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறினர். சொந்த நாட்டில் நடந்த உலககோப்பையில் ஆஸ்திரேலியா அணி செய்த தவறை உதாரணமாக எடுத்துக்கொண்டு நாம் சுதாரித்துக்கொள்ள வேண்டும்.” என கூறினார்.
“இந்திய அணி டி20 உலக கோப்பையில் ஆறு போட்டிகளை ஆறு வாரங்களில் விளையாடியது. போதிய ஓய்வுடன் விளையாடிய வீரர்கள் சிலருக்கு எதற்காக நியூசிலாந்து தொடரின் போது ஓய்வு கொடுத்தீர்கள்? இது சலுகையாக தெரியவில்லையா?. இனி இந்த வருடம் முழுவதும் சீனியர் வீரர்களுக்கு குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் ஓய்வு என்பதே இருக்கக் கூடாது. அதிக போட்டிகளில் ஒன்றாக பயிர்ச்சி செய்து விளைடினால் மட்டுமே நல்ல பாட்னர்ஷிப் மற்றும் புரிதல் இருக்கும்.” என்றார்.