டிவில்லியர்ஸ் பாதி, கோஹ்லி பாதி கலந்து செய்த கலவை நான்; ஸ்டீவ் ஸ்மித் !!
கோஹ்லி, டிவில்லியர்ஸ் போன்ற உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களிடம் இருக்கும் தனித்தன்மையை கண்டுபிடித்து அதனை தனது பேட்டிங் முன்னேற்றத்துக்கு பயன்படுத்தி வருவதாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
தற்போதைய கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் தங்களது அணியை கம்பீரமாக வழிநடத்தி வருவதோடு தங்களது தனிப்பட்ட ஆட்டத்திலும் மிரட்டி உலகின் தலை சிறந்த வீரர்களாக திகழ்ந்து வருகின்றனர். முன்னாள் ஜாம்பவான்களின் சாதனையை இருவரும் போட்டி போட்டு காலி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித், இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்திய கேப்டன் கோஹ்லி மற்றும் தென் ஆப்ரிக்கா அணியின் டிவில்லியர்ஸ் ஆகியோரிடம் இருந்து பேட்டிங் நுணுக்கங்களை கற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஸ்டீவ் ஸ்மித், சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது எப்படி என்பதை இந்திய கேப்டன் விராட் கோஹ்லியைப் பார்த்து கற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். அதே போல் அதிரடி ஆட்டத்தில் டிவில்லியர்ஸை போலவும், போட்டி நுனுக்கங்களில் கேன் வில்லியம்சனை போலவும் விளையாட முயற்சித்து வருவதாகவும், அவர்களின் ஆட்டங்களை உற்று கவனித்து வருவதாக ஸ்மித் தெரிவித்துள்ளார்.
சம கால கிரிக்கெட்டில் தனக்கு கடும் சவாலாக இருந்து வரும் இந்திய கேப்டன் கோஹ்லியிடம் இருந்து, தான் பேட்டிங் நுணுக்கங்களை கற்று வருவதாக ஸ்மித் ஓபனாக தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.