மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – நியூஸிலாந்து ஒருநாள் தொடர், சிறிதும் சுவாரசியமின்றி இந்திய அணிக்குச் சாதகமாகத் திரும்பியுள்ளது. இன்று நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 3-0 என தொடரையும் கைப்பற்றியுள்ளது.
5 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் என இரு தொடர்களில் விளையாடுவதற்காக கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி நியூஸிலாந்து நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, அதே உத்வேகத்துடன் நியூஸிலாந்தில் வெற்றிகளைப் பெற்று வருகிறது. முதல் இரு ஒருநாள் ஆட்டங்களையும் வென்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி. 
மௌன்ட் மவுன்கனியில் நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் காயம் காரணமாக தோனிக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் இடம்பெற்றார். விஜய் சங்கருக்குப் பதிலாக ஹார்திக் பாண்டியா அணிக்குள் நுழைந்தார்.பேட்டிங்குக்குச் சாதகமான இந்த ஆடுகளத்தில் நியூஸிலாந்து அணியால் 49 ஓவர்களில் 243 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. இந்தியப் பந்துவீச்சாளர்களில் ஷமி 3 விக்கெட்டுகளும் சாஹல், புவனேஸ்வர், பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்கள். இந்தமுறையும் முழு 50 ஓவர்களும் விளையாடாமல் போனதால் நியூஸிலாந்து அணியால் மீண்டும் அதிக ரன்களை எடுக்கமுடியாமல் போனது.
இந்த ஆட்டத்திலும் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் அமைந்தது. 27 பந்துகளில் 6 பவுண்டரிகளைக் கடகடவென அடித்து, 28 ரன்களுடன் ஆட்டமிழந்தார் தவன். பிறகு ரோஹித் சர்மாவும் கோலியும் விரைவாக ரன்கள் சேர்த்தார்கள். முதலில் 69 ரன்களில் 50 ரன்கள் சேர்த்த இவர்கள் அடுத்ததாக 105 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்கள்
இந்திய அணி, 43 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்து 3-வது ஒருநாள் ஆட்டத்தை எளிதாக வென்றதோடு ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. இந்தத் தொடரில் 2-வது முறையாக வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்துள்ளது.
இந்த ஆட்டத்துடன் கேப்டன் விராட் கோலி, நியூஸிலாந்துச் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார். கடைசி இரு ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் அவர் பங்கேற்கமாட்டார். இதையடுத்து மீதமுள்ள ஆட்டங்களுக்கு ரோஹித் சர்மா கேப்டனாகச் செயல்படுவார். 4-வது ஒருநாள் ஆட்டம் வரும் 31 அன்று ஹேமில்டனில் நடைபெறவுள்ளது.