முதன்முறையாக டர்பனில் இந்திய அணி வெற்றி!! ட்விட்டரில் கோலாகலம்!!!! 1

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கேப்டன் விராட் கோலி சதம் விளாசினார்.

ஒரு நாள் கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி டர்பனில் நேற்று நடந்தது. இந்திய ஆடும் லெவன் அணியில் ரஹானேவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பிளிஸ்சிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி குயின்டான் டிக் காக்கும், ஹசிம் அம்லாவும் தென்ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். நிதானமாக ஆடிய இந்த ஜோடி 30 ரன்களை (7.3 ஓவர்) எட்டிய போது பிரிந்தது. அம்லா (16 ரன்), பும்ராவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 2-வது விக்கெட்டுக்கு களம் புகுந்த கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், புவனேஷ்வர்குமாரின் ஓவரில் தொடர்ந்து 3 பவுண்டரிகள் விரட்டியடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சிறிது நேரத்தில் டி காக் 34 ரன்களில் (49 பந்து, 4 பவுண்டரி), யுஸ்வேந்திர சாஹலின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

மிரட்டிய சுழல்

இதன் பின்னர் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் தொடுத்த சுழல் தாக்குதலில் தென்ஆப்பிரிக்காவின் ரன்வேகம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. இவர்களது பந்து வீச்சில் தென்ஆப்பிரிக்க வீரர்கள் தடுமாறினர். டி காக்குக்கு பிறகு வந்த மார்க்ராம் 9 ரன்னிலும், டுமினி 12 ரன்னிலும், டேவிட் மில்லர் 7 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். அதாவது 20 முதல் 30-வது ஓவருக்குள் தென்ஆப்பிரிக்கா 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சிக்குள்ளானது. அப்போது தென்ஆப்பிரிக்க அணி 28 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 134 ரன்களுடன் பரிதவித்தது.

இந்த சூழலில் 6-வது விக்கெட்டுக்கு பிளிஸ்சிஸ்சுடன், கிறிஸ் மோரிஸ் கைகோர்த்தார். இவர்கள் அணியை வீழ்ச்சியின் பிடியில் இருந்து மீட்டனர். வேகப்பந்து வீச்சில் எளிதில் ரன்களை திரட்டிய இந்த ஜோடி 40-வது ஓவரில் அணியின் ஸ்கோரை 200 ரன்களாக உயர்த்தியது.

பிளிஸ்சிஸ் சதம்

ஸ்கோர் 208 ரன்களை எட்டிய போது, கிறிஸ் மோரிஸ் (37 ரன், 43 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), குல்தீப் யாதவ் வீசிய ‘புல்டாஸ்’ பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். அவர் நேராக பேட்டை சுழட்டியிருந்தால் சிக்சர் கூட போயிருக்கும். ஆனால் ‘ஸ்வீப் ஷாட்’ அடிக்க முயற்சித்ததால் விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஒருமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும் கேப்டன் பிளிஸ்சிஸ் மட்டும் தூண் போல் நிலைத்து நின்று ஆடினார். 9-வது சதத்தை நிறைவு செய்து அணி சவாலான ஸ்கோரை அடைய வழிவகுத்த பிளிஸ்சிஸ் கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். பிளிஸ்சிஸ் 120 ரன்களில் (112 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த ரபடா (1 ரன்) ரன்-அவுட் ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் சேர்த்தது. பெலக்வாயோ 27 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார், பும்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

கோலி, ரஹானே கலக்கல்

பின்னர் 270 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா 20 ரன்னிலும் (30 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஷிகர் தவான் 35 ரன்னிலும் (29 பந்து, 6 பவுண்டரி) வெளியேறினர். இதையடுத்து கேப்டன் விராட் கோலியும், ரஹானேவும் கூட்டணி அமைத்து பிரமாதப்படுத்தினர். தென்ஆப்பிரிக்க பந்து வீச்சை பின்னியெடுத்த இவர்கள் கச்சிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர். கோலி தனது 33-வது சதத்தை பூர்த்தி செய்தார். இலக்கை நெருங்கிய சமயத்தில் ரஹானே (79 ரன், 86 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) தூக்கியடித்து கேட்ச் ஆனார். இதே போல் விராட் கோலி (112 ரன், 119 பந்து, 10 பவுண்டரி) ‘ஷாட்பிட்ச்’ பந்தில் வீழ்ந்தார்.

அடுத்து வந்த டோனி பவுண்டரி அடித்து இலக்கை எட்ட வைத்தார். இந்திய அணி 45.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 270 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பெற்றது. டோனி 4 ரன்னுடனும், ஹர்திக் பாண்ட்யா 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

டர்பனில் முதல்முறையாக…

டர்பனில், இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை சாய்த்தது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு அங்கு தென்ஆப்பிரிக்காவிடம் 6 ஆட்டங்களில் தோற்று இருந்தது.

இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் நாளை மறுதினம் நடக்கிறது.

https://twitter.com/SriniMama16/status/959127335441088513

 

https://twitter.com/Sassy_Soul_/status/959131302896136192

https://twitter.com/Naman_1345/status/958740426516611072

https://twitter.com/aamirshaikh4596/status/959077284001890304

https://twitter.com/RamTwitz/status/959256489104846848

https://twitter.com/BurningDezire_/status/959138682761392128

https://twitter.com/rohitk_10/status/959083277956116482

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *