17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டிகளில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றன.
இந்தியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 6-ம் தேதி தொடங்கியது. நேற்று (14-ம் தேதி) நான்கு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.
கவுஹாத்தியில் 5 மணிக்கு தொடங்கிய லீக் ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஹாண்டுரஸ் – பிரான்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் பிரான்ஸ் 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது. பிரான்ஸ் தரப்பில் இசிடோர் (14-வது நிமிடம்), ஃப்லிப்ஸ் (23-வது மற்றும் 64-வது நிமிடம்), கவுரி (86-வது நிமிடம்), அட்லி (90+6-வது நிமிடம்) கோல் அடித்தனர். ஹாண்டுரசில் மேஜியா 10-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
கொல்கத்தாவில் 5 மணிக்கு தொடங்கிய முதல் லீக் ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஜப்பான் – நியூ கலிடோனியா அணிகள் மோதின. இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. ஜப்பானின் நாகுமுரா 7-வது நிமிடத்திலும், நியூ கலிடோனியாவின் ஜெனோ 83-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
கவுஹாத்தியில் 8 மணிக்கு தொடங்கிய மற்றொரு ஆட்டத்தில் ‘எஃப்’ பிரிவில் இடம்பிடித்துள்ள மெக்சிகோ – சிலி அணிகள் மோதின. இப்போட்டியில் இரு அணியினரும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை, இதனால் இந்த ஆட்டமும் டிராவில் முடிந்தது.
லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. இரண்டாம் கட்டமாக நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன. நாளைய ஆட்டங்களில் கொலம்பியா – ஜெர்மனி, பராகுவே – அமெரிக்கா அணிகள் மோத உள்ளன.
சென்னையின் எப்.சி. கோல்கீப்பிங் பயிற்சியாளராக முன்னாள் கால்பந்து வீரர் டோனி வார்னர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்) போட்டி தொடர் 2014-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான சென்னையின் எப்.சி. அணியின் புதிய கோல்கீப்பிங் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். 2017-18 ம் ஆண்டின் இந்திய சூப்பர் லீக் போட்டிக்கான பயிற்சியாளராக 43-வயதான முன்னாள் கால்பந்து வீரர் டோனி வார்னர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் இங்கிலாந்து அணியில் கோல்கீப்பராக விளையாடி உள்ளார். ட்டினிதாத் மற்றும் டோபகோ ஆகிய இரு அணிகளுக்காக சர்வதேச போட்டியில் விளையாடியுள்ளார். மேலும், போல்டன் வாண்டர்ஸ் அணியின் கோல்கீப்பிங் பயிற்சியாளராக பணியாற்றினார்.
கிளப்பின் தலைமை பயிற்சியாளர் ஜான் க்ரேகோரி, உதவி பயிற்சியாளர்கள் மார்க் லில்லிஸ் மற்றும் சையத் சபீர் பாஷா, விளையாட்டு விஞ்ஞானி நியால் கிளார் ஆகியோருடன் இணைந்து பணிபுரிவார் என கூறப்பட்டது.
பயிற்சியாளராக பதவியேற்ற வார்னர், ‘சென்னையின் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஜான் க்ரேகோரி போன்ற பயிற்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாகும். அணியின் முன்னேற்றத்திற்காக சிறந்த முறையில் செயலாற்றுவேன்’ என கூறினார்.
சென்னையின் அணி தாய்லாந்தின் ஹூயா கின்னில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.