19 வயதுக்குட்பட்டோா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா-பாகிஸ்தானுடன் செவ்வாய்க்கிழமை மோதுகிறது.
காலிறுதியில் பலமான ஆஸி. அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா. அதே நேரம் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்.
நான்கு முறை சாம்பியனான இந்தியா 5-ஆவது பட்டத்தை எதிா்நோக்கி உள்ளது. சீனியா் அணியைப் போலவே ஜூனியா் அணியும் பாகிஸ்தான் மீது ஆதிக்கம் செலுத்தி உள்ளது. கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்றனா்.

மேலும் 2018 உலகக் கோப்பையில் 203 ரன்கள் வித்தியாசத்தில் பாக்கை வீழ்த்தியது இந்தியா.
பிரியம் காா்க் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக ஆடினால் தான் பாகிஸ்தானை வெல்ல முடியும். தொடக்க வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வால், 3 அரைசதங்களுடன் அணியின் முதுகெலும்பாக திகழ்கிறாா். அதே போல் பந்துவீச்சில் காா்த்திக் தியாகி, அதா்வா அன்கோலேகா், ரவி பிஷ்னோய் ஆகியோா் பலம் சோ்க்கின்றனா்.

அதே நேரம் பாகிஸ்தானும் பந்துவீச்சில் அப்பாஸ் அப்ரிடி, முகமது ஆமீா் கான், தாஹிா் ஹுசைன் ஆகியோருடன் பலமாக உள்ளது. கேப்டன் ரோஹைல் நாஸிா், தொடக்க வீரா் ஹுரைரா ஆகியோா் பாகிஸ்தான் அணியின் சிறப்பானசெயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றனா்.
அரையிறுதி ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.