விராட் கோலி ஆட்டத்தைக் காண இங்கிலாந்து தம்பதி 860 மைல் தூரம் பயணம் செய்து கேப் டவுன் வந்து போட்டியை ரசித்துள்ளனர்.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கடந்த 5-ந்தேதி கேப் டவுனில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 286 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 209 ரன்னில் சுருண்டது. 77 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது நாளில் (7-ந்தேதி) மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிமை மையம் கூறியிருந்தது. அதன்படி மழை பெய்ததால் 3-வது நாள் ஆட்டம் மழையால் தடைபட்டது. அப்போது ஒரு வயதான ஜோடி மைதானத்திற்கு வந்திருந்தது. அந்த ஜோடியை பார்த்த சில பத்திரிகைகள் உள்ளூர் வானிலை மையம் இன்று மழை பெய்யும் என்று கூறிய பின்னரும் மைதானத்திற்கு வந்தது குறித்து கேட்டனர்.
அப்போது ‘நாங்கள் இங்கிலாந்தில் இருந்து வந்துள்ளோம். இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் ஆட்டத்தை காண வந்தோம்’ என்றனர். இதுகுறித்து இங்கிலாந்துகாரர் ஜான் கூறுகையில் ‘‘நானும் எனது மனைவியுமான கிறிஸ்ஸாவும் இந்த நகரத்தை மிகவும் நேசிக்கிறோம். ஏனென்றால், இது அமைதியானதாகவும், மிகவும் அழகான இயற்கைகளையும் கொண்டது.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையிலான போட்டிய காண முதன்முறையாக இங்கு வந்தோம். அந்த போட்டி டிராவில் முடிந்த போதிலும், நியூலேண்டு மைதானத்தில் சந்தோசமாக நேரத்தை கழித்தோம்.
தற்போது இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான போட்டியை காண வேண்டும் என்று முடிவு செய்தோம். ஏனென்றால், நாங்கள் விராட் கோலியின் ஆட்டத்தைக் காண விரும்பினோம். விராட் கோலி சிறந்த வீரர். உண்மையிலேயே அவர் உலகின் தலைசிறந்த வீரர். துரதிருஷ்டவசமாக சொற்ப ரன்களில் அவுட்டாகியுள்ளார். இன்னும் ஒரு இன்னிங்ஸ் உள்ளது’’ என்றார்.
2-வது இன்னிங்சில் விராட் கோலி 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் ஒன்றிரண்டு பவுண்டரிகள் விளாசினார். அதை ஜான் தம்பதி ரசித்திருப்பார்கள்.