பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் உமர் அக்மலை, பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) போட்டியின் போது ஸ்பாட்பிக்சிங் என்ற சூதாட்டத்தில் ஈடுபட வைக்க சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் அணுகிய விவகாரம் சர்ச்சையாக வெடித்தது. ஆனால் இந்த விஷயத்தை கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்ல உமர் அக்மல் தவறி விட்டார். இதையடுத்து அவர் கடந்த மாதம் 20-ந்தேதி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
உமர் அக்மல் மீது ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக இரண்டு பிரிவுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. விசாரணை முடிவில் அவர் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் 6 மாதங்கள் முதல் ஆயுட்கால தடை வரை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க உமர் அக்மலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. வருகிற 31-ந்தேதிக்குள் அவர் எழுத்துபூர்வமாக பதில் அளிக்க வேண்டும்.

5-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ்- லாகூர் காலண்டர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த முல்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக குஷ்தில் ஷா 70 ரன்கள் (5 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார்.

–IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE- (Photo credit should read SAEED KHAN/AFP/Getty Images)
அடுத்து களம் இறங்கிய லாகூர் அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 191 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கிறிஸ் லின் (ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்) 113 ரன்கள் (55 பந்து, 12 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசி அமர்க்களப்படுத்தினார். பி.எஸ்.எல். போட்டியில் லாகூர் அணி வீரர் அடித்த முதல் சதம் இது தான். இந்த வெற்றியின் மூலம் லாகூர் அணி முதல்முறையாக அரைஇறுதிக்கு முன்னேறியது. கொரோனா பரவல் காரணமாக, ஸ்டேடியத்திற்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.