எனக்கு கிடைக்கும் அதே பணம் விளையாடிய வீரர்களுக்கும் கிடைக்க வேண்டும் ; டிராவிட் பெருந்தன்மை
உலகக்கோப்பையை வென்ற இந்திய இளம் அணி வீரர்களுக்கு பி.சி.சி.ஐ., அறிவித்துள்ள 30 லட்சம் ரூபாய் போதாது என்று இந்திய இளம் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், நியூசிலாந்தில் நடைபெற்றது. இந்த தொடரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய இளம் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கியது. இது இந்திய அணி பெறும் நான்காவது உலகக்கோப்பையாகும்.
இதனையடுத்து இந்திய இளம் அணியை ஊக்கப்படுத்தும் விதமாக வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 30 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் பி.சி.சி.ஐ அறிவித்தது. அதே போல் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டிற்கு 50 லட்சம் ரூபாயும் மற்ற நிர்வாகிகளுக்கு தலா 20 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் பி.சி.சி.ஐ அறிவித்தது.
இந்நிலையில் தனக்கு கிடைக்கும் அதே பணம் விளையாடிய வீரர்களுக்கும், மற்ற நிர்வாகிகளுக்கும் சரி சமமாக கிடைக்க வேண்டும் என்று டிராவிட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் “தனக்கு மட்டும் ரூ. 50 லட்சம் கொடுத்தது ஏற்றுக் கொள்ள முடியாது. அணி வீரர்கள், அணிக்கான மற்ற ஆதரவாக இருந்த ஊழியர்களுக்கும் சரிசமமான பரிசுத் தொகை கொடுக்க வேண்டும். அனைவரின் ஒட்டுமொத்த உழைப்பால் தான் இளம் இந்திய அணி கோப்பையை வெல்ல முடிந்தது” என்று பெருந்தன்மையுடன் தெரிவித்துள்ளார்.
தன்னடக்கத்தின் மறு உருவமான டிராவிட்டை ஏற்கனவே ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், டிராவிட்டின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் அவர் மீதான மதிப்பை மேலும் அதிகரித்துள்ளது.