விராட் கோலிக்கு இருக்கும் அனுபவத்திற்கு கண்டிப்பாக வரும் 50 ஓவர் உலகக் கோப்பையில் அவர் இருக்க வேண்டும் என ஆதரவாக பேசியுள்ளார் கௌதம் கம்பீர்.
ஐசிசி நடத்தும் 13வது 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்திய அணி நிர்வாகம் நடத்தும் நான்காவது உலகக் கோப்பை தொடர் இதுவாகும்.
கடைசியாக 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. அதன் பிறகு நடந்த இரண்டு உலகக்கோப்பையில் இந்திய அணி ஏமாற்றத்தையே தந்தது. இந்த வருட உலககோப்பையில் அப்படி நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக பிசிசிஐ பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
குறிப்பிட்ட 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த வருடம் முழுவதும் அவர்களுக்கு மட்டுமே மாற்றி மாற்றி வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்றும், அந்த முன்னேற்பாடுகளில் ஒரு திட்டமாக பிசிசிஐ முடிவு செய்திருக்கிறது. இவை ஒருபுறம் இருக்க, பிசிசிஐ என்ன முடிவு எடுத்தாலும் இந்த இரண்டு வீரர்கள் கட்டாயம் 50 ஓவர் உலகக் கோப்பையில் இடம்பெற வேண்டும் என்று ஆதரவாக பேசியிருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர்.
கம்பீர் கூறுகையில்,
“விராட் கோலிக்கு இது நான்காவது உலககோப்பை. வெகு சில வீரர்களே இத்தனை உலககோப்பையில் விளையாடி இருக்கிறார்கள். இரண்டாவது முறையாக பதக்கத்தை வெல்வதற்கு விராட் கோலி ஆவளோடு இருப்பார். சொற்ப வீரர்களே இரண்டுமுறை உலகக்கோப்பை வென்றுள்ளார்கள்.
விராட்கோலி நல்ல ஃபார்மிலும் இருக்கிறார். அவரது அனுபவம் மற்றும் சமீபத்திய பேட்டிங் ஃபார்ம் இரண்டும் இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகமாக இருக்கும் என்பதால் கட்டாயம் இந்த 50 ஓவர் உலககோப்பையில் அவர் இருக்க வேண்டும்.
அடுத்ததாக ரோகித் சர்மா கட்டாயம் வருகிற உலககோப்பையில் இருக்க வேண்டும். அவர் கேப்டனாக இருப்பார்? இல்லை? என்பது இரண்டாம் பட்சம். ஆனால் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற இரண்டு அனுபவமிக்க வீரர்கள் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் இருக்க வேண்டும்.
ஏனெனில் சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சுப்மன் கில் போன்ற வீரர்களுக்கு இந்திய அணி நிர்வாகம் உலககோப்பையில் இடம்கொடுக்க உள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. இவர்கள் அனைவருக்கும் இது முதல் உலக கோப்பை. அனுபவமற்ற இந்த வீரர்கள் மத்தியில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற அனுபவமிக்க வீரர்கள் கட்டாயம் இருக்கவேண்டும்.
50 ஓவர் போட்டிகள் என்பது முழுக்க முழுக்க பாட்னர்ஷிப் பொறுத்தே அமையும். குறைந்தபட்சம் இரண்டு நல்ல பார்ட்னர்ஷிப் வரவேண்டும். அதற்கு அனுபவமிக்க வீரர்கள் அணியில் தேவை அவர்களால் மட்டுமே அழுத்தம் நிறைந்த சூழலை எதிர்கொண்டு நங்கூரம் போல நிலைத்து நின்று கடைசி வரை போராட முடியும்.
அப்படிப்பட்ட ஒரு வீரர் விராட் கோலி. யாருக்கு கொடுக்கிறார்களோ, இல்லையோ! விராட் கோலிக்கு கட்டாயம் இந்த 50 ஓவர் உலககோப்பையில் இடம் கொடுக்க வேண்டும். ரோகித் சர்மா மற்றொரு அனுபவ வீரராக இடம்பெற வேண்டும்.” என்று பேசியுள்ளார் கௌதம் கம்பீர்.