இந்தியா- வங்கதேசம் இடையே நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியை மைதானத்தில் இருந்து விசில் அடித்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த பாட்டி சாருலதாவுக்கு அடுத்துவரும் போட்டிகளுக்கான டிக்கெட் பொறுப்பு தன்னுடையது என்று இந்திய கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். இதனால் சாருலதா பாட்டி மகிழ்ச்சி அடைந்தார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தியா – வங்கதேசத்துக்கு இடையேயான போட்டி நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது.
ஆட்ட விறுவிறுப்புக்கு இடையே மைதானத்தின் முன்வரிசையில் அமர்ந்து இந்திய வீரர்களை உற்சாகப்படுத்திய 87 வயது ரசிகை சாருலதா படேல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்தியா 4, 6 விளாசும் போதெல்லாம் தன் கையிலிருந்த சிறிய பிளாஸ்டிக் ட்ரம்பட்டை வைத்து ஓசை எழுப்பி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார் சாருலதா.

இவரது புகைப்படங்களும், வீடியோவும் வைரலாகப் பகிரப்பட்டது. போட்டி முடிந்த பின்னர் கேப்டன் கோலியும், ரோஹித்தும் சாருலதா பாட்டியைச் சந்தித்தனர்.
இதுகுறித்து சாருலதா படேல் கூறும்போது, ”கோலி போட்டி முடிந்த பிறகு என்னைப் பார்க்க வந்தார். அவர் என் காலைத் தொட்டு வணங்கினார். நான் அவருக்கு ஆசிர்வாதம் செய்தேன். சிறப்பாக விளையாடி உலகக்கோப்பையை வெல்லுங்கள் என்று கூறினேன்.
நான் எப்போதும் இந்திய அணியின் வெற்றிக்காக எனது அடி மனதிலிருந்து பிரார்த்திப்பேன்.
விராட் கோலி அடுத்து வரும் போட்டிகளிலும் என்னை எதிர்பார்ப்பதாகக் கூறினார். ஆனால், என்னிடம் அதற்கான டிக்கெட் இல்லை என்று அவரிடம் கூறினேன். அதற்கு அதனைப் பற்றி கவலைப்படாதீர்கள். நான் தருகிறேன்” என்றார்.
மேலும் பாட்டியைக் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி,
‘மீதமுள்ள அனைத்து உலகக்கோப்பை போட்டிகளுக்கு உங்களுக்கு நான் கண்டிப்பாக, சத்தியமாக டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்து தருகிறேன்.’ என்று உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து சாருலதா பாட்டியின் பேத்தி அஞ்சலி கூறும்போது, ”கோலி அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். இந்தியா அடுத்து இலங்கையுடன் விளையாடும் போட்டிக்கான டிக்கெட்டையும், அரையிறுத்திகான டிக்கெட்டையும் வழங்கியுள்ளார்.
நாங்கள் இன்னும் கூடுதலாக அவரிடம் டிக்கெட் கேட்டோம். ஆனால் கோலியால் அதனை ஏற்படு செய்ய முடியவில்லை” என்று தெரிவித்தார்.
சாருலதா பாட்டி ஏற்கனவே அரசு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்று தற்போது உலகம் முழுவதும் சுற்றி கிரிக்கெட் பார்க்க வேண்டும் என்று இங்கிலாந்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது