தோனியுடனான படத்தை பதிவிட்டது குறித்து கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.
கேப்டன் விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 2016 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி குறித்து பதிவிட்டிருந்தார். அதில், “என்னால் மறக்க முடியாத ஒரு போட்டி. ஸ்பெஷலான இரவு. பிட்னஸ் தேர்வைப் போல் இந்த மனிதர் (தோனி) என்னை ஓட வைத்தார்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
A game I can never forget. Special night. This man, made me run like in a fitness test ? @msdhoni ?? pic.twitter.com/pzkr5zn4pG
— Virat Kohli (@imVkohli) September 12, 2019
ஆனால், தோனி ஓய்வை அறிவிக்கப் போகிறார் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் படமும் ட்வீட் பதிவும் இருப்பதாக ரசிகர்களால் புரிந்து கொள்ளப்பட்டது. பின்னர், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தோனியின் ஓய்வு குறித்த தகவல் வேகமாக பரவியது. பின்னர், அந்தச் செய்தி தவறானது என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் மற்றும் தோனியின் மனைவி சாக்ஷி விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில், சர்ச்சையாக அந்தப் படத்தை பதிவிட்டது குறித்து கேப்டன் விராட் கோலி இன்று விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, “எதனையும் மனதில் வைத்து அந்தப் படத்தை நான் பதிவிடவில்லை. வீட்டில் இருந்தபடி யதார்த்தமாகத்தான் அதனைப் பதிவிட்டேன். ஆனால், அது செய்தியாகிவிட்டது. என்னைப் பற்றி நான் நினைப்பது போல் உலகமும் அதேபோல் நினைக்க வேண்டிய அவசியமில்லை என்ற பாடத்தை கற்றுக் கொண்டேன்.
அந்தப் போட்டி எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனைப்பற்றி நான் வெளிப்படையாக பேசவில்லை. அதனால்தான் அந்த படத்தை பதிவிட்டேன். ஆனால், மக்கள் அதனை வேறுமாதிரி புரிந்து கொண்டனர்.
நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அனுபவம் என்பது மிகவும் முக்கியமான விஷயம்தான். வயது என்பது ஒரு விஷயமல்ல என்பதை பலரும் நிரூபித்து இருக்கிறார்கள். தோனியும் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இதனை பலமுறை செய்துகாட்டியுள்ளார். இந்திய அணிக்காகவே யோசிப்பதுதான் அவரது சிறப்பு அம்சம். ஓய்வு பெறுவது என்பது ஒருவரது தனிப்பட்ட விஷயம். அதுகுறித்து மற்றவர்கள் கருத்து தெரிவிக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.