தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஜூன் 5ம் தேதி நடைபெறும் போட்டிக்கு முன்பாக ராகுலின் பார்ம் ‘ஒரு பெரிய நம்பிக்கை தரும் அம்சம்’ என்கிறார் கேப்டன் விராட் கோலி.
4ம் நிலைக்கு விஜய்சங்கரை முதலில் யோசித்தனர், ஆனால் அவர் உடற்தகுதி, பார்ம் இரண்டுமே நம்பத்தகுந்ததாக இல்லாததால் ராகுல்தான் சிறந்தவர் என்ற முடிவுக்கு அணி நிர்வாகம் வந்துள்ளது, ஆனால் ராகுல் ‘ஓகே இந்தப் புதிய பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்று மனமுவந்து ஆர்வமுடன் கூறவில்லை. ஏனோதானோவென்று பதிலளித்துள்ளார்.
விராட் கோலி கூறும்போது, “இந்தப் பயிற்சி ஆட்டத்தின் மிகப்பெரிய நம்பிக்கை கே.எல்.ராகுலின் சதம்தான். மற்ற வீரர்களுக்கு அவரவர் ரோல் என்னவென்பது தெரியும். ஆகவே ராகுல் ரன் எடுப்பது முக்கியம் என்று கருதினோம், அவர் உறுதியான வீரர். அவரால் ரன் விகிதத்தை இறங்காமல் கொண்டு செல்ல முடியும். அதைத்தான் பார்த்தோம், திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு அவர்” என்றார் ராகுல்.

ஆனால் கே.எல்.ராகுல் இது பற்றி கூறிய போது உறுதியுடன் இந்த ரோலை ஏற்பேன் என்று கூறாமல் வழக்கம் போல் கூறுவது போல், “இது ஒரு அணிசார்ந்த விளையாட்டு, நீங்கள் எங்கு ஆடச்சொன்னாலும் ஆடக்கூடிய நெகிழ்வுத் தன்மையுடன் இருப்பது அவசியம், அல்லது ஒரு வீரராக கொடுக்கப்படும் ரோலை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
இந்த மட்டத்தில் ஆடும் எந்த வீரராக இருந்தாலும் அழுத்தத்தை எப்படி கையாள்வது என்பதையும் கொடுக்கப்பட்ட ரோல்களை எப்படி கையாள வேண்டும் என்பதையும் நன்றாகவே அறிந்திருப்பார்கள்.
2 ஆண்டுகளாக திட்டமிட்டு இவருக்கு இந்த ரோல்தான் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே தற்போது தனிப்பட்ட வீரர்களுக்கு கொடுக்கும் பொறுப்பு நமக்கு எந்தவித ஆச்சரியத்தையும் அளிக்கப்போவதில்லை.
தனிப்பட்ட வீரராக ஒவ்வொருவரையும் பல்வேறு நிலைகளில் இறக்கிப் பார்த்தாகி விட்டது. நாங்களும் அந்த ரோல்களில் ஆடிவிட்டோம், தற்போது வேறு ஒரு ரோல் கொடுத்தால் அதில் எப்படி திறமையைக் காட்ட வேண்டும் என்பதையும் அறிவோம்” என்று பொத்தாம் பொதுவாக ராகுல் கூறுகிறாரே தவிர ‘ஒகே நான் இந்த ரோலை எதிர்நோக்குகிறேன், 4ம் நிலையில் என்னால் சிறப்பாக ஆட முடியும்’ என்று நம்பிக்கையாகக் கூறுவது போல் தெரியவில்லை.