பிரபலங்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் முக்கியமானது இன்ஸ்டாகிராம். கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் விளையாட்டு நட்சத்திரங்கள், திரை உலகினர் தங்களது வீடியோ, போட்டோ மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களை இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள். இதிலும் அவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.
பிரபலங்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்ட ஸ்பான்சர் நிறுவனங்களின் பதிவுகளை பதிவிடுவதற்கு தொகை வசூலிப்பது வழக்கம். அந்த வகையில் ஊரடங்கு காலத்திலும் அவர்கள் சம்பாதித்த தொகை எவ்வளவு (மார்ச் 12-ந்தேதி முதல் மே 14-ந்தேதி வரையிலான காலத்தில் மட்டும்) என்பது ஆய்வு செய்து வெளியிடப்பட்டு உள்ளது.
இதன்படி விளையாட்டு வீரர்களில் இன்ஸ்டாகிராம் ஸ்பான்சர் பதிவுகளின் மூலம் அதிக தொகை குவிக்கும் டாப்-10 பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 6-வது இடத்தை பிடித்துள்ளார். 2 மாதத்திற்கு மேலாக கிரிக்கெட் போட்டிகள் இன்றி வீட்டிலேயே கோலி முடங்கி இருந்தாலும் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். அவரும், அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் அவ்வப்போது வித்தியாசமான வீடியோ, போட்டோக்களை பதிவிடுகிறார்கள். சக வீரர்களுடனும் உரையாடுகிறார்கள்.
மூன்று ஸ்பான்சர் பதிவுகளின் மூலம் ஊரடங்கு காலத்தில் மட்டும் கோலி வீட்டில் இருந்தபடியே ரூ.3 கோடியே 60 லட்சம் சம்பாதித்து உள்ளார். இன்ஸ்டாகிராமில் கோலியை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 6 கோடியே 21 லட்சம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on InstagramA post shared by Virat Kohli (@virat.kohli) on
போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டனும், இத்தாலியின் யுவென்டஸ் கிளப்புக்காக விளையாடுபவருமான கிறிஸ்டியானா ரொனால்டோ இன்ஸ்டாகிராம் சம்பாத்தியத்தில் எப்போதும் ஆதிக்கம் செலுத்துகிறார். பொதுமுடக்கத்திலும் கூட அவரே ‘நம்பர் ஒன்’ ஆக திகழ்கிறார். நெருக்கடியான இந்த காலக்கட்டத்தில் அவர் ரூ.18 கோடியை இந்த வகையில் வருவாய் ஈட்டி இருக்கிறார். அதாவது அவரது ஒரு ஸ்பான்சர் பதிவின் மதிப்பு ரூ.4½ கோடி ஆகும். ஒட்டுமொத்தத்தில் 22 கோடியே 24 லட்சம் ரசிகர்கள் ரொனால்டோவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மொய்க்கிறார்கள்.
இந்த பட்டியலில் 2-வது இடத்தில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சியும் (ரூ.12½ கோடி), 3-வது இடத்தில் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மாரும் (ரூ.11½ கோடி), 4-வது இடத்தில் அமெரிக்க முன்னாள் கூடைப்பந்து வீரர் ஷக்கியூல் ஓ நியலும் (ரூ.5½ கோடி), 5-வது இடத்தில் இங்கிலாந்து முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காமும் (ரூ.3 கோடியே 85 லட்சம்) உள்ளனர்.
View this post on InstagramA post shared by Virat Kohli (@virat.kohli) on